×

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைபுரியும் சாந்திவனம் காப்பகத்துக்கு அரசு செயலாளர் பாராட்டு

கரூர், ஆக. 19: தோகைமலை ஒன்றியம் சீத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சாந்தி வனம் மனநல காப்பகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு மையத்தை, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளர் ஆனந்தகுமார் திறந்து வைத்து, புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளர் ஆனந்தகுமார் பேசியதாவது: சாந்திவனம் சேவை உள்ளத்தோடு பல்வேறு மொழி பேசும் மக்களை கொண்டு நடத்தி வரும் தொழிற்பயிற்சி மையத்தை அரசு அலுவலர்கள் கவனித்து வருகின்றனர்.

சாந்திவனம் மனநல காப்பகத்தில், சாலையோரத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் 68 பேர், பெண்கள் 56 பேர் என 124 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு முறைகள், உணவு தயாரிக்கும் இடம், சிகிச்சை அளிக்கும் இடம், இங்கு சிகிச்சை பெறுபவர்கள் எந்த இடத்தில் மீட்கப்பட்டார்கள், அவர்களின் குடும்ப பின்னணி, தற்போது அவர்களின் உடல்நலம், மன நல சிகிச்சை பெற்று நல்வாழ்வு பெற்றவர்களுக்கு சிறு கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றுக் கொடுத்து, அதன் பின்னர் அவர்களின் உறவினர்கள் முகவரி தெரியவந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 1,578 நபர்கள் மறுவாழ்வு பெற்று திரும்பியிருக்கின்றனர். இதில், இலங்கையை சேர்ந்த ஒரு பெண்மணியும் அடங்குவார் என்றார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை, மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளர் ஆனந்தகுமார் பார்வையிட்டு, அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ. 4 லட்சத்து 53 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால், கை போன்ற அவயங்களை அரசு செயலாளர் வழங்கினார்.

தொடர்ந்து, பஞ்சமாதேவி ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்டத்தின் முன்னோடி திட்டமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘விடியல் வீடு’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் சிறப்புகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சாந்தி வனம் டிரஸ்ட் நிர்வாக செயலாளர் ராமகிருஷ்ணன், மருத்துவ ஆலோசகர் அருண்குமார், பொது மருத்துவர் சத்தியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (பொ) சந்திரமோகன், குளித்தலை கோட்டாட்சியர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைபுரியும் சாந்திவனம் காப்பகத்துக்கு அரசு செயலாளர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Government ,Santivanam Shelter ,Karur ,Shanti Vanam ,Seethapatti, Thokaimalai Union ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...