×

3 கிளீனிக்குகளுக்கு ‘சீல்’ போலி ஆஸ்பத்திரி செயல்பட்டால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

திருப்பூர், ஆக.19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ முறைகேடு தடுப்பு குழு போலி மருத்துவர் ஒழிப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டம், பொங்கலூர், உகாயனூர் ரோடு, விநாயகர் வளாகம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த ஜெய்சக்தி நேச்சர் கியூர் ஹாஸ்பிடல் மற்றும் மல்டி ஸ்பெசாலிட்டி சென்டர், பல்லடம் சாலை, சின்னக்கரை பகுதியில் செயல்பட்டு வந்த திவ்யா கிளினிக் மற்றும் பல்லடம் வட்டம், பனைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த ரிஷி அக்குபஞ்சர் சென்டர் ஆகியவைகளில் கடந்த மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் உரிய கல்வித்தகுதி இல்லாமலும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 1997 -இன் படி அனுமதி பெறாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டு, மேற்கண்ட மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் மேற்கண்ட கிளினிக்குகள் மற்றும் அக்குபஞ்சர் சென்டர்களில் பணிபுரியும் மருத்துவர்களின் சான்றிதழ்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட கிளினிக்குகள் சீலிடப்பட்டது.

பொதுமக்கள் முறையான கல்வித் தகுதியில்லாத மருத்துவர்களிடமும், அனுமதி பெறாமல் இயங்கும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறச் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறான மருத்துவமனைகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

The post 3 கிளீனிக்குகளுக்கு ‘சீல்’ போலி ஆஸ்பத்திரி செயல்பட்டால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : SEAL ,Tirupur ,Tirupur District ,Collector ,Kristhraj ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...