×

பர்கூரில் ₹5.80 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்

கிருஷ்ணகிரி, ஆக.19: பர்கூர் பேரூராட்சியில், ₹5.80 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பர்கூர் நகரை குட்டி சூரத் என்றழைப்பது வழக்கம். இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஜவுளி கடைகள் உள்ளன. குறிப்பாக பர்கூர் டெக்ஸ்டைல் மார்க்கெட் பகுதியில், ஒரே இடத்தில் அனைத்து ஜவுளி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு ₹100 முதல் ₹3 லட்சம் வரையிலான துணி வகைகள் குவிக்கப்பட்டுள்ளது. தாலுகா தலைநகரமாக உள்ள இந்த நகரில், அரசு பொறியியல் கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. அத்துடன் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் உள்ளது. இந்த நகரமானது ஆந்திரா மாநில எல்லையிலும், திருப்பத்தூர் மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ளது.

அத்துடன் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கிரானைட் கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால், வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நகரமாக உள்ளது. குறிப்பாக பொங்கல், தீபாவளி, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், வாகன போக்குவரத்து நெருக்கம் போன்ற காரணங்களால் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ₹1.38 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், பூமாலை நகர் முதல் ஜெகினி கொல்லை இணைப்பு சாலை வரை, நபார்டு திட்டத்தின் கீழ் ₹1.25 கோடி மதிப்பில் 1,772 மீ., நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள், மூலதான மானிய நிதி திட்டத்தின் கீழ் ₹94 லட்சம் மதிப்பில் 1,160 மீ., நீளத்திற்கு விஐபி நகர், கணேஷ் நகர், பிருந்தாவன் நகர், கொரலசின்னப்ப செட்டி தெரு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ₹1.30 கோடி மதிப்பீட்டில் வசந்த நகர் குறுக்கு சாலை, விஐபி நகர், அனுமன் நகர் குறுக்கு சாலை பகுதிகளில் 1,225 மீ., நீளத்திற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ₹92.80 லட்சம் மதிப்பில் ஜிகினி கொல்லை மேல்பள்ளம் சாலை, துரைஸ் நகர் குறுக்கு தெரு, எம்ஜிஆர் நகர், கோவிந்தப்ப செட்டி தெரு, வீட்டு சதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் பழுதடைந்த தார் சாலைகள் மேம்பாடு திட்ட பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் ₹5.80 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினசரி குப்பைகள் அகற்றும் பணிகள், குடிநீர் விநியோகத் திட்டப்பணிகள், தெருவிளக்கு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி நாடார் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், கையெழுத்து, கணிதம் மற்றும் ஆங்கில வாசிப்பு திறன் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, மாணவ- மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி கற்றல் திறனை அதிகப்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் மகேந்திரன், வார்டு உறுப்பினர்கள் ஆகாஷ், ஜான்ஜேசுதாஸ், வசந்த் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பர்கூரில் ₹5.80 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Parkur ,Krishnagiri ,Barkur ,Dinakaran ,
× RELATED அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி பலி