×

நீட் குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்டதால் ஆத்திரம் மாணவியின் தந்தை வேலையை பறிக்க சொல்லி பாஜவினர் மனு: சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் வழங்கினர்

சேலம்: நீட் விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி உருக்காலை அதிகாரிகளிடம் பாஜவினர் புகார் மனு கொடுத்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன், நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ‘ஒருபோதும் நீட் விலக்கிற்கு கையெழுத்திட மாட்டேன்’ என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியிடம் மசோதா உள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய சேலம் உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வந்து உருக்காலை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த மாவட்ட தலைவர் சண்முகநாதன் கூறுகையில்,‘‘உருக்காலை ஊழியர் அம்மாசியப்பன் கடந்த 12ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வு தொடர்பாக ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் அது தொடர்பாக, தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து சட்டவிதிகளை மீறி பேட்டியளித்துள்ளார். இது அரசு ஊழியருக்கான விதி மீறிய செயல். அம்மாசியப்பன் பணியில் சேரும்போது, போலியான இருப்பிட சான்று வழங்கி பணியில் சேர்ந்துள்ளார். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தோருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்துள்ள அவர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர். அதனால், அம்மாசியப்பனை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என உருக்காலை நிர்வாக இயக்குநருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம். அவரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால், பாஜ சார்பில் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்.

The post நீட் குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்டதால் ஆத்திரம் மாணவியின் தந்தை வேலையை பறிக்க சொல்லி பாஜவினர் மனு: சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Governor ,Bajaviner ,Salem Iron ,Salem ,Urkala ,Bhajaviner ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...