×

அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு: ஊராட்சி தலைவர் அசத்தல் ஆபர்

திருவாரூர்: ‘அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி விலக்கு அளிக்கப்படும்’ என்று ஊராட்சி தலைவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அதே ஒன்றியத்தை சேர்ந்த 18 புதுக்குடி ஊராட்சியில் கடந்த 15ம் தேதி சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் திவ்யா கணேசன் தலமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு தீர்மானத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடப்பாண்டில் சேர்ந்துள்ள மற்றும் சேரவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி விலக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து பி.இ பட்டதாரியான ஊராட்சி தலைவர் திவ்யா கணேசன் கூறுகையில், ‘ஊராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் எனது சொந்த செலவில் ரூ.55 ஆயிரம் மதிப்பில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. நடப்பாண்டில் 16 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களது வீடுகளின் வரி மற்றும் குடிநீர் வரி எனது சொந்த செலவில் ஊராட்சிக்கு செலுத்தப்படும். இதேபோல் மேலும் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களது வீடுகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும்’ என்றார்.

The post அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு: ஊராட்சி தலைவர் அசத்தல் ஆபர் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,President ,Asthal Abar ,Tiruvarur ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்