×

தென் மாவட்ட மாணவர்களின் சாதி பிரச்னைகளுக்கு குழு அமைத்து தீர்வு: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

நெல்லை: தென் மாவட்டங்களில் மாணவர்களின் சாதிய பிரச்னைகளுக்கு குழு அமைத்து தீர்வு காண வேண்டும். கந்துவட்டி பிரச்னைகள் குறித்து ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று நெல்லையில் தெரிவித்தார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான மனித உரிமை வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு ஏற்கனவே நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையமும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே இந்த வழக்கில் மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டியதில்லை. இருப்பினும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவரை நாங்கள் நேரில் சந்தித்து கருத்து கேட்க உள்ளோம். தாக்கப்பட்ட சம்பவத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைக்கு மாநில அரசுக்கு பரிந்துரைப்போம்.

தென் மாவட்டங்களில் இத்தகைய சாதி ரீதியான பிரச்னை நடந்து வருகிறது. கோவில்பட்டி அருகே கழுகுமலையிலும் மாணவர்கள் பிரச்னை அரங்கேறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதிய வித்துக்களை மாணவர்கள் மத்தியில் விதைக்க கூடாது. மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பள்ளி ஆசிரியரிடமோ அல்லது சமூக நல ஆர்வலரிடமோ தெரிவிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் சாதிய பிரச்னைகளுக்கு ஒரு குழு அமைத்து தீர்க்கலாம். கந்துவட்டி குறித்த பல்வேறு புகார்களும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தென் மாவட்ட மாணவர்களின் சாதி பிரச்னைகளுக்கு குழு அமைத்து தீர்வு: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : southern ,Human Rights Commission ,Kannadasan ,Nellai ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...