×

சங்கரராமன் கொலை உள்பட 40 வழக்குகளில் தொடர்புடையவர் மெரினா லூப் சாலையில் கூலிப்படை தலைவன் படுகொலை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் பரபரப்பு

* ஆபத்தான நிலையில் நண்பருக்கு சிகிச்சை
* காரில் தப்பிய 5 பேர் கும்பலை பிடிக்க 3 தனிப்படை

சென்னை: பிரபல கூலிப்படை தலைவனான புளியந்தோப்பு ரவுடி ஆற்காடு சுரேஷை, காரில் வந்த 5 பேர் கும்பல் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (42). 10ம் வகுப்பு வரை படித்த இவர், சரியாக படிப்பு வரவில்லை என்பதால் சென்னைக்கு வந்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சிவில் சப்ளை குடோனில் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழில் செய்து வந்தார். ஆற்காடு சுரேசுக்கு பொற்கொடி என்ற மனைவியும் தமிழ் என்ற மகன் மற்றும் மதுமிதா என்ற மகள் உண்டு. மகன் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மகள் தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு சுரேஷ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரிசி குடோனில் வேலை செய்யும் போது, அங்கு கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் புளியந்தோப்பு நரசிம்மா நகர் 3வது தெருவை சேர்ந்த அஞ்சலை (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஞ்சலைக்கும் ஆற்காடு சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அஞ்சலையின் உறவினரான வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சின்னா என்பவருடன் நட்பு கிடைத்தது. அதன் மூலம் விஜயவாடாவை சேர்ந்த பிரபல ரவுடியான அப்பு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்பு ஆந்திராவில் செம்மரம் கடத்தல் தொழிலில் 1985க்கு முந்தைய ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர். இதனால் ஆந்திர போலீசாருக்கு பயந்து அப்பு சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 1988ம் ஆண்டுகளில் தங்கி இருந்தார். அப்போது ரவுடி சின்னா மூலம் ஆந்திர ரவுடி அப்புவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் ரவுடி அப்புக்கு போட்டியாக இருந்த விஜயவாடா பகுதியை சேர்ந்த சீனிவாசலு ரெட்டி என்பவரை கடந்த 2002ம் ஆண்டு வெட்டி தனது முதல் கொலையை பதிவு செய்தார்.

2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கரராமன் என்பவர் கூலிப்படையினரால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஆற்காடு சுரேசுக்கு முக்கிய பங்கு இருந்தது.
சைதாப்பேட்டையில் 2005ம் ஆண்டு வெங்கடேசன் என்பவரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். 2007ம் ஆண்டு பரமேஸ்வரன் என்பவரை வெட்டி கொலை செய்தார். இந்நிலையில் அஞ்சலையை அடைய ரவுடி சின்னா ஆசைப்பட்டார். இதற்கு ஆற்காடு சுரேஷ் தடையாக இருந்தார். இதனால் இருவருக்கும் நேரடி மோதல் தொடங்கியது.

2010ல் ரவுடி சின்னா வழக்கு ஒன்றில் ஆஜராக பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு தனது வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் பெண் வழக்கறிஞர் ஷியாமளா என்பவருடன் வந்தார். அப்போது ஆற்காடு சுரேஷ் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி சின்னாவை வெட்டி படுகொலை செய்தார். அதை தடுக்க வந்த சின்னாவின் வழக்கறிஞர் பகத்சிங்கையும் வெட்டி கொலை செய்தார். பெண் வழக்கறிஞர் ஷியாமளாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நீதிமன்ற வளாகத்தில் இரட்டை கொலை செய்ததால் ஆற்காடு சுரேஷ் ரவுடிகள் மத்தியில் கொடிக்கட்டி பறந்தார்.

2015ம் ஆண்டு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவுடி தேன்னு (எ) தென்னரசு என்பவரை கொலை செய்தார். பின்னர் கடைசியாக 2018ம் ஆண்டு புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரின் தந்தை ராதா (63) என்பவரை ஆற்காடு சுரேஷ் வெட்டி படுகொலை செய்தார். இவன் மீது மொத்தம் 7 கொலை, 17 கொலை முயற்சி என மொத்தம் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்தநேரத்தில், தனது கள்ளக்காதலியான அஞ்சலை பாஜவில் வடசென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்தார். இதனால் ஆற்காடு சுரேஷ் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற தோரணையில் பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு ஆற்காடு சுரேஷின் செயல்களால் அஞ்சலையை பாஜவில் இருந்து நீக்கிவிட்டனர். 2021ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் புளியந்தோப்பு ஆடுதொட்டியில் தனிப்படை போலீசார் ஆற்காடு சுரேஷை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த ஆற்காடு சுரேஷ் பெரிய அளவில் குற்றங்களில் நேரடியாக ஈடுபடாமல் தலைமறைவாகவே இருந்து கொண்டு, கூலிப்படையினரை வைத்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ராதா கொலை வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆஜராக ஆற்காடு சுரேஷ் தனது நண்பரான வழக்கறிஞர் மது என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். பிறகு கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதைதொடர்ந்து, மதுவுடன் காரில் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள ‘மீனவன் உணவகம்’ என்ற ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது லூப் சாலையில் மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்து மீனவன் உணவகம் முன்பு நின்றது. அதில் இருந்து சடசடவென அரிவாள்களுடன் 5 பேர் இறங்கி, சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற நண்பர் மதுவுக்கும் வெட்டு விழுந்தது. இதை ஓட்டலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிந்தவர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் வெட்டுவதை பார்த்து பீதியில் நாலாபுறமும் அலறி அடித்து ஓடினர்.

அப்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் 5 பேர் ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாள்களுடன் அங்கிருந்து காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர். உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆற்காடு சுரேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த பட்டினப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய ஆற்காடு சுரேஷ் அவரது நண்பரான வழக்கறிஞர் மதுவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். வழக்கறிஞர் மதுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வழக்கு பதிவு செய்த போலீசார், கொலை நடந்த லூப் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று காரில் தப்பிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். அதேநேரம், குற்றவாளிகளை பிடிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக 2018ம் ஆண்டு கொலை செய்த ராதா கொலைக்கு ஆற்காடு சுரேஷ் பழிக்குப்பழி கொலை செய்யப்பட்டாரா அல்லது ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். ஓட்டலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிந்தவர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் வெட்டுவதை பார்த்து பீதியில் நாலாபுறமும் அலறி அடித்து ஓடினர். அப்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் 5 பேர் ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாள்களுடன் அங்கிருந்து காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர்.

The post சங்கரராமன் கொலை உள்பட 40 வழக்குகளில் தொடர்புடையவர் மெரினா லூப் சாலையில் கூலிப்படை தலைவன் படுகொலை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sankararaman ,Marina Loop Road ,Pandemonium ,Pattinpakkam ,Chennai ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை