×

ரயில்வே டூரிசம் பெயரில் போலி ஆப் மூலம் பணம் பறிப்பு: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரிக்கை

சென்னை: ரயில்வே டூரிசம் பெயரில் போலி ஆப் மூலம் மோசடி நபர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநில சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) என்ற பெயரில் போலியான மொபைல் செயலி உருவாக்கப்பட்டு மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எங்களுக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. ஐஆர்சிடிசி செயலி போல் போலியான செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் பொதுமக்கள் கூகுள் பிலே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆப்களில் இருந்து மட்டுமே (ஐஆர்சிடிசி) செயலியை பதிவிறக்க வேண்டும்.

செல்போன்களில் தேவையில்லாத இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். ஐஆர்சிடிசியின் வாடிக்கையாளர்கள் சேவையை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். தெரியாத எண்களிலிருந்து அனுப்பப்படும் செய்தியில் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். அங்கீகரிக்கப்படாத செயலி பதிவிறக்கங்களை தடுக்க, உங்கள் செல்போன்களில் உள்ள அமைப்புகளில் தெரியாத செயலிகள் பதிவிறக்கம் செய்யும் முறையை முடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வங்கி உள்ளிட்ட எந்த ஒரு ஓடிபி மற்றும் பின் எண்கள் மற்றும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம். ஏதேனும் மோசடி நடவடிக்கை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனே சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண் 1930க்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரயில்வே டூரிசம் பெயரில் போலி ஆப் மூலம் பணம் பறிப்பு: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sanjay Kumar ,CHENNAI ,Railway Tourism ,ADGP ,Dinakaran ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...