×

மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இதை நிறைவேற்றும்; ராமேஸ்வரம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ராமநாதபுரம்: மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்திர தீர்வு. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இதை நிறைவேற்றும் என்று ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார். திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் மீனவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். நேற்று மண்டபத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், 14,000 பேருக்கு ரூ.88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைதாவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக 2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கிறது. கைது, தாக்குதலை தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு பறித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. படகுகளை அரசுடைமையாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகயிருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாம்பனில் பாஜ சார்பில் ‘கடல் தாமரை’ போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா? இதே ராமநாதபுரத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேசிய மோடி, “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது.

இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்” என்று சொன்னார். நாங்கள் கேட்கிறோம், பாஜ ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால் இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று 2014ம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி. சபதத்தை நிறைவேற்றி விட்டாரா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்னை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்னை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாரே மோடி? 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2015, 2016ம் ஆண்டுகளில் தாக்குதல் தொடர்ந்தது. 2017ல் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது.

ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள். 2020ம் ஆண்டு முதல் இன்று வரை, தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கை கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள். மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 604 மீனவர்களையும் 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

அதில் 59 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னமும் இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம்? மோடி ஆட்சி பலவீனமான ஆட்சிதானே என்று அர்த்தம்? மீனவர் தாக்கப்படும் சம்பவத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். 19.7.23ல் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன், கச்சத்தீவு இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்த காலமும் இருந்தது இல்லை.

கச்சத்தீவை காக்க தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மீறியே கச்சத்தீவு கொடுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. இது வெறும் ஒப்பந்தம் மட்டுமே. சட்டம் அல்ல. கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றிய அரசுக்கு கலைஞர் கொடுத்தார். ‘இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததன்மூலமாக இந்தியாவுக்கு அல்ல.. தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து’ என நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் முழங்கினார். திமுக உறுப்பினர் இரா.செழியனும் நாடாளுமன்றத்தில் எதி்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளான 29.6.1974 அன்று, அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஆதரித்த அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான். அன்று முதல் இன்று வரை ஒரே விஷயத்தை அக்கட்சி தெளிவாக செய்கிறது. அது தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது. 21.8.1974 என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார் கலைஞர்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டன கூட்டம் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சையில் கலைஞர், சென்னையில் பேராசிரியர், திருப்பெரும்புதூரில் நான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக, இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல் சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது. கண்டிக்கத்தக்கது. கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும்.

எனவே, இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை இப்போதாவது தொடங்க வேண்டும். பாஜ அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை காப்போம்.

மீனவர்களின் நலனை காப்பதாக என்றைக்கும் திமுக, நம் திராவிட மாடல் அரசு இருக்கும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அப்படித்தான் செயல்படுவேன் என்ற உறுதியை கூறிக் கொண்டு, அதற்கு மீனவ சமுதாயம் எப்போதும் போல எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன். இவ்வாறு பேசினார். முன்னதாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கங்களை பார்வையிட்டார். விழாவில் அமைச்சர்கள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* கலாம் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
மீனவர் மாநாடுக்கு முன்னதாக, ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவிடம் சென்றார். அங்கு கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலாமின் நினைவிடத்தில் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார்.

* மீனவர் நலன் காக்க 10 அறிவிப்புகள்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடந்த மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தான பத்து திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அவை வருமாறு:
1. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 35 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
2. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி ரூ.8 ஆயிரமாக வழங்கப்படும்.
4. 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும்.
5. 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
6. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
7. மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
8. மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
9. மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
10. பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இதை நிறைவேற்றும்; ராமேஸ்வரம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Kachathidi ,Rameswaram conference ,Chief Minister ,Mukha ,G.K. Stalin ,Ramanathapuram ,Kachathitiya ,Rameswaram ,Conference ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...