×

சிங்கப்பூரில் நடந்த மெகா சோதனை ரூ.6,100 கோடி பணம், சொகுசு கார், பங்களாக்கள் பறிமுதல்: வெளிநாட்டை சேர்ந்த 10 பேர் கும்பல் கைது


சிங்கப்பூர்; சிங்கப்பூரில் நடந்த மெகா சோதனையில் ரூ.6100 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், 50 கார்கள், பங்களாக்கள், சட்டவிரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த 10 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பல் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகள் மூலம் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்து சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். சிங்கப்பூர் முழுவதும் ஆர்ச்சார்ட் ரோடு முதல் சென்டோ தீவு வரை 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம், மற்றும் தங்ககட்டிகள், தங்க நகைகள்,விலை உயர்ந்த சொகுசுகார்கள் கைப்பைகளில் இருந்த பல்வேறு மாடல்களில் கைக்கடிகாரங்கள் சிக்கியது. 94 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 6,100 கோடி மதிப்பிலான பங்களாக்கள், 50 சொகுசு கார்கள் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர். இதில் பணம் மட்டும் ரூ.140 கோடி கட்டுக்கட்டாக சிக்கியது.

மேலும் வங்கி கணக்குகளில் ரூ.700 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சீனா, கம்போடியா, சைப்ரஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 31 வயது முதல் 40 வயதுக்குட்டவர்கள் ஆவார்கள். சைபீரியா நாட்டை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் தப்பி ஓட முயன்ற போது காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பங்களாவில் இருந்து ரூ.12 கோடி ரொக்கப்பணம் உள்பட ரூ.722 கோடி மதிப்பிலான 13 சொத்து ஆவணங்கள், 5 வாகனங்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். இது தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஒரு நெட்வொர்க் அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடுகளில் மோசடி செய்த பணத்தை சிங்கப்பூரில் பதுக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*சிங்கப்பூர் அனுமதிக்காது
சிங்கப்பூர் போலீஸ் படையின் வணிக விவகார இயக்குநர் டேவிட் செவ் கூறுகையில்,’வெளிநாடுகளில் பணம் மோசடி செய்த குற்றவாளிகள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தப்படுவதற்கும், வங்கி வசதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கும் சிங்கப்பூர் ஒரு போதும் அனுமதி அளிக்காது. இந்த குற்றவாளிகளுக்கு எங்கள் செய்தி எளிதானது. நாங்கள் உங்களைப் பிடித்தால், உங்களைக் கைது செய்வோம். உங்கள் முறைகேடான ஆதாயங்களைக் கண்டறிந்தால், நாங்கள் அவற்றைப் பறிமுதல் செய்வோம். எங்கள் சட்டங்கள் அடிப்படையில் உங்களை கையாள்வோம்’ என்று தெரிவித்தார்.

*வெளிநாட்டு பணம்
சிங்கப்பூரில் இவ்வளவு பெரிய அளவு பணம் சிக்கியிருப்பது அங்குள்ள அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் நடக்கும் மோசடிகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து வரும் வருமானத்தை மோசடி செய்து இந்த குழுவினர் சிங்கப்பூரில் பதுக்கி வைத்து இருக்காலம் என்று சந்தேகிக்கப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post சிங்கப்பூரில் நடந்த மெகா சோதனை ரூ.6,100 கோடி பணம், சொகுசு கார், பங்களாக்கள் பறிமுதல்: வெளிநாட்டை சேர்ந்த 10 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...