
திருத்தணி: அரசு மேல்நிலையில் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மத்தூர், கொத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு போதிய கட்டிடம் இல்லை. அதேபோன்று, பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாத காரணத்தால் காலை, இரவு நேரத்திலும் மது பிரியர்கள், மது பாட்டில்களுடன் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மேலும், இந்த பள்ளி கூடத்தில் இரவு நேரத்தில் பாலியல் மற்றும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மது பாட்டில்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அங்கு நடைபெறுவதால் பள்ளிக்கு செல்ல மாணவ மாணவிகள் தயக்கம் காட்டினர். இது குறித்து தங்களுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு மாணவர்கள் கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து, மாணவர்கள் வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசப்பட்டது.
இதில், வகுப்பறைக்கு போடப்பட்டிருந்த நான்கு பூட்டுகளுக்கு மனித மலம் பூசப்பட்டிருந்தது. இதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பம் காட்டு தீ போல் கிரமத்தில் பரவியது. இதனை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இந்த செயலை செய்த நபரை கண்டித்தும் மேலும், இந்த பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாத காரணத்தால், பள்ளி வளாகத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் எனவே இந்த பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பள்ளியின் வளாகம் மற்றும் வெளியிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து கேள்விபட்ட, திருத்தணி வட்டாட்சியர் மதன், வருவாய் ஆய்வாளர் கமல், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சென்று போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்ககப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்னர், பள்ளிகளை சுத்தம் செய்து விட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர். இதனால் அங்கு இரண்டு மணி நேரம் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது.
The post பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் : அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.