×

மொளச்சூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை முதன்மை செயலாளர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் பகுதியில் ரூ80 லட்சம் மதிப்பில் விநாயகர் கோயில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியினை ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் பகுதியில் விநாயகர் கோயில் குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலந்து மாசடைந்தது. இதனால், இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதனையடுத்து, நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டிடங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

இதையடுத்து, பாழடைந்து காணப்பட்ட குளத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ80 லட்சம் மதிப்பில் குளத்தை தூர்வாரி சீரமைத்து, கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து குளம் பணிகளை முடித்து, பின்னர் கரையை சுற்றி மரக்கன்றுகளை நடவு செய்து, நடைபயிற்சி செய்ய நடைபாதை அமைத்து தர கோரிக்கை வைத்தனர்.

இதனைதொடர்ந்து சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்க கூடிய பெண்களிடம் செய்முறை விளக்கம் கேட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மொளச்சூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மொளச்சூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை முதன்மை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Principal Secretary ,Molachur panchayat ,Sriperumbudur ,Rural Development Department ,Vinayagar Temple pond ,Sunguarschatram ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூன்...