×

தச்சூர் சிவன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னை: தச்சூர் சிவன் கோயிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மிகவும் பழமைவாய்ந்த முருகன் கற்சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் 7 மற்றும் 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டது. 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த கோயில் பிற்காலத்தில் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், அக்னி, வருணலிங்கம், சோமாஸ்கந்தர், துர்க்கை, சேஷடா தேவி, சங்கநிதி, பத்மதேவி, நந்தி சிலை, கருவறையில் இருந்த லிங்கம் என 13 கற்சிலைகளை கடந்த 1998ம் ஆண்டு மீட்டு வழிபாடு செய்து வந்தனர்.

இதற்கிடையே 1999 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மிகவும் தொன்மையான முருகன் சிலையை திருடி சென்று விட்டனர். சிலை திருட்டு குறித்து அப்போது ஊர்மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 3ம்தேதி தச்சூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி உடையார் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் திருடப்பட்ட முருகன் சிலை குறித்து புகார் அளித்தார். அதன்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் சிலையை கண்டுபிடிக்க எஸ்பி சக்தி கணேசன், கூடுதல் எஸ்பிக்கள் பாலமுருகன், தேவராஜ், டிஎஸ்பி முத்துராஜா ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் வெளிநாடுகளில் அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகளுடன் திருடுபோன முருகன் சிலையுடன் ஒப்பிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் திருடப்பட்ட தொன்மையான முருகன் கற்சிலை அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. அதற்காக திருடப்பட்ட முருகன் சிலையின் பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஒப்பிட்டு சிலை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள முருகன் கற்சிலையை இந்திய வெளிநாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் மீட்கும் பணியில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், இந்த தொன்மையான முருகன் சிலையை அமெரிக்காவிற்கு யார் கடத்தி சென்றது, பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தச்சூர் சிவன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thachur Shiva temple ,USA ,Chennai ,Murugan ,America ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!