×

வன்னியர் சங்க கட்டிடத்திற்கு சீல்; பரங்கிமலையில் ரூ100 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: பரங்கிமலையில் அரசு இடத்தில் இயங்கிய வன்னியர் சங்க கட்டிடத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். ரூ100 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. பரங்கிமலை – பூந்தமல்லி சாலையில் 41,952 சதுர அடி கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கம் இயங்கி வந்தது. இந்த இடத்தை காலி செய்யும்படி பல்லாவரம் வருவாய் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர்கள் காலி செய்து தரவில்லை. இதையடுத்து, அந்த கட்டிடத்தை கையகப்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடத்தின் முன்பாக கூடினர்.

பரங்கிமலை போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக் சிவாஸ் உள்ளிட்டோர் வந்தனர். வன்னியர் சங்க கட்டிடத்திற்கு சீல் வைத்து பாதுகாப்பிற்கு போலீசாரை நிறுத்தினர். ரூ100 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் சுப்பிரமணி மற்றும் பாமகவினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நோட்டீஸ் அனுப்பாமல் படிக்கும் மாணவர்களை வெளியேற்றி எப்படி கட்டிடத்திற்கு சீல் வைக்கலாம் என வருவாய் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளோ, ஏற்கனவே சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக கூறினர். பிறகு போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
பரங்கிமலையில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்துக்கு நேற்று அரசு சீல் வைத்தது. இதற்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது. வன்னியர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளனர். எனவே, விசாரணை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். கட்டிடத்தை இடிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

The post வன்னியர் சங்க கட்டிடத்திற்கு சீல்; பரங்கிமலையில் ரூ100 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Vanniyar ,Sangha ,Parangimalai ,Revenue Department ,Chennai ,Vanniyar Sangha ,Sangh ,Revenue ,Dinakaran ,
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...