×

ராமநாதபுரத்தில் 5 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு.!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த 10 பணியாளர்கள் மற்றும் 5 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.08.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த 10 பணியாளர்கள் மற்றும் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றிய 5 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறை பணியாளர்கள் இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் வரி தாண்டலராக பணிபுரிந்து வரும் எஸ்.மங்களநாத சேதுபதி மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், கடந்த 15 ஆண்டுகளாக தனது சொந்த செலவில் நாள்தோறும் 30 நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.

மேலும் ஊரணிகளை சுத்தம் செய்தல், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, கொரோனா காலகட்டத்தில் அரிசி, காய்கறி, முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கியது, பள்ளி மாணவர்களுக்கு செல்போன் வழங்குதல் மற்றும் ரத்ததான முகாம் நடத்துதல் போன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வரும் திரு.உடையார் அவர்கள், கொரோனா காலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டதோடு, அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு அனைவரிடமும் நற்பெயர் பெற்று வருகிறார். பரமக்குடி நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் திரு.ராஜேந்திரன் அவர்கள் நகராட்சிக்கு வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவர் நகராட்சி ஆணையாளர் அவர்களின் ஓட்டுநராக பணியாற்றினாலும், இடைப்பட்ட நேரத்தில் குப்பை அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களையும் இயக்கி உதவிகள் செய்து வருகிறார். இவர் அலுவலக நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள் புகாரின் பேரில் கழிவுநீர் குழாய்கள் சரி செய்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உதவியாக இருந்துள்ளார். பந்தப்பனேந்தல் ஊராட்சிய ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் சரவண பூபதி கொரோனா காலகட்டத்தில் இலவசமாக முகக்கவசம் வழங்கியும், 100 நபர்களுக்கு ஐந்து மாதங்கள் தினமும் உணவு வழங்கியும் உள்ளார். இவர் யோகா, கிராமிய நடனம், ஆங்கிலம் பேசுதல், தையல் பயிற்சி ஆகியவற்றை தான் பணிபுரியும் பள்ளியைச் சுற்றியுள்ளள மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களை கண்டறிந்து அவர்கள் படிப்பதற்கும், மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் திருமதி புவணி அவர்கள், கொரோனா காலகட்டங்களில் சிறப்பாகப் பணிபுரிந்து, ஏழை எளிய மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உணவு வழங்குவதையும், ஆதரவில்லாமல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது சிறப்பான பணி காரணமாக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். பெரும்பாலான நேரங்களில் பணி நேரம் முடிந்த பின்னரும் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதற்காக இவர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

நயினார் கோயில் ஒன்றியம், பனிதவயல் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் திருமதி. ரீட்டா அவர்கள், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளிடம் அன்பாகவும் பாசமாகவும், குழந்தைகள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும், அனைத்து குழந்தைகளிடமும் நன்கு பழகும் இயல்புடையவராகவும் இருந்து வருகிறார். இவர் அரசு திட்டங்களை பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளை அரசு அலுவலகங்களுக்கு உடன் அழைத்துச் சென்று திட்டங்களை பெற்று தருவதற்கான உதவிகளை செய்து வருகிறார். இராமேஸ்வரம் மீன்வளத்துறையில் மீன்வள மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் திரு.நடேஷ்பாபு அவர்கள், கடல்பாசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துவதற்கும், இறால் பண்ணைகளை அரசு வரையறைப்படி ஒழுங்குமுறைப்படுத்தியும், நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகமானோர் பயன்பெற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

கீழக்கரை கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் திரு.பாண்டி அவர்கள், இதற்குமுன் காஞ்சிரங்குடி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த போது பொதுமக்கள், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு உதவியாக இருந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரம் காலம் கருதாமல் வாங்கிக் கொடுத்து பாராட்டுகளை பெற்றுள்ளார். இராமேஸ்வரம் போக்குவரத்து காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.யுவராஜ் அவர்கள், பணிபுரியும் இடங்களில் தனது சொந்த பணத்திலிருந்து ஏழைகளுக்கு தினமும் உணவு வழங்குவது மற்றும் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

மேலும் அலுவல் நேரத்தை கணக்கிடாமல் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், கமுதியில் தீயணைப்பவராக பணிபுரிந்து வரும் திரு.பழனி அவர்கள், தீ விபத்து மற்றும் மீட்பு அழைப்புகளின் போதும், சம்பவ இடத்திற்கு உடனே சென்று பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் கூட இரு சக்கர வாகனங்களில் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் ஏர்வாடி மற்றும் சாயல்குடியில் பணிபுரிந்த போது கிணற்றில் விழுந்தவரை உயிருடன் மீட்டும், உச்சநத்தம் கிராமம், காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட போது நீந்தி சென்று கிராம மக்களை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள செய்து பாராட்டுகளை பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த திரு.எஸ்.மங்களநாத சேதுபதி, திரு.உடையார், திரு. ராஜேந்திரன், திருமதி. சரவணபூபதி, திருமதி புவணி, திருமதி ரீட்டா, திரு. நடேஷ்பாபு, திரு. பாண்டி, திரு. யுவராஜ், திரு. பழனி ஆகியோரது சேவைகளைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

சிறந்த சமூக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் இராமநாதபுரத்தில் அப்பாஸ் அலி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் திரு. அமீர் ஹம்ஷா அவர்கள் மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் ஏழைகளிடம் பணம் பெற்றுக் கொள்ளாமல் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வது, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உதவுவது, இரத்ததானம் செய்தல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை அரசு மனநல காப்பகத்தில் சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் திரு. ராஜவீர் அவர்கள், தினமும் 15 நபர்களுக்கு மூன்றுவேளை உணவும், புதன்கிழமை மட்டும் மதியம் 50 நபர்களுக்கு உணவும் அளித்து வருவதோடு, இலவச கண் சிகிச்சை முகாமையும் நடத்தி வருகிறார். Voice From Heart என்ற அமைப்பை நடத்தி வரும் செல்வி லிடியா அவர்கள், 200 இளைஞர்களை அமைப்பில் இணைத்து, அந்த அமைப்பின் மூலம் குறவர், காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பது, இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல், முதியோர்களுக்கு உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் போன்ற சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இராமேஸ்வரம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமதி தில்லை பாக்கியம் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, இலவச உபகரணங்கள் கிடைக்க உதவி செய்தல், மனநலம் குன்றிய நபர்களுக்கு அரசு உதவித்தொகை பெற உதவி செய்தல், மீனவர்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கு உதவி செய்தல் போன்ற சமூகப் பணிகளை செய்து வருகிறார். பரமக்குடியில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் திரு. முகமது அலி ஜின்னா அவர்கள், அனாதை உடல்களை அடக்கம் செய்தல், இலவச கண் சிகிச்சை முகாம், இரத்ததர்ன முகாம், உடலுறுப்புகள் தான நிகழ்ச்சிகள், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கதல், நன்கொடை வழங்குதல் போன்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் திரு. அமீர் ஹம்ஷா, திரு. ராஜவீர், செல்வி லிடியா, திருமதி தில்லை பாக்கியம், திரு. முகமது அலி ஜின்னா ஆகியோரது சேவைகளைப் பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

The post ராமநாதபுரத்தில் 5 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு.! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chief Minister ,M.K. ,Stalin ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...