×

ம.பி., பாஜக-வில் காலியாகும் ஜோதிராதித்யா சிந்தியா கூடாரம்: 5000 ஆதரவாளர்களோடு சென்று காங்கிரஸில் இணைந்தார் சமந்தர் படேல்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் 1,200 வாகனங்களில் ஊர்வலமாக சென்று காங்கிரஸில் இணைந்தது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி சார்பில் கமல்நாத் முதலமைச்சரானார். ஆனால், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்.எல்-க்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான சமந்தர் படேல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகியதும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் நீமுச் பகுதியில் இருந்து 1,200 வாகனங்களில், சமந்தர் படேல் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் ராகேஷ் குப்தா, பைஜ்நாத் சிங் ஆகியோரும் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். சிந்தியாவோடு பாஜகவுக்கு சென்ற பெரும்பாலானோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவதால் மத்திய பிரதேச அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

The post ம.பி., பாஜக-வில் காலியாகும் ஜோதிராதித்யா சிந்தியா கூடாரம்: 5000 ஆதரவாளர்களோடு சென்று காங்கிரஸில் இணைந்தார் சமந்தர் படேல் appeared first on Dinakaran.

Tags : Jyotiraditya Scindia ,BJP ,Samanthar Patel ,Congress ,Bhopal ,Madhya Pradesh ,Samandar Patel ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...