×

தயிர்… பொடி… ரவா… பொடிசா…

இட்லியில் இருக்கு இவ்வளவு வெரைட்டி!

நம்ம ஊரில் அனைவருக்கும் ஏற்ற உணவு என்றால் அது இட்லிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் இட்லியை. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சத்து மிகுந்த உணவென மருத்துவர்கள் பரிந்துரைப் பதும் இட்லியைத்தான். உடலுக்கு சுகமில்லை என மருத்துவமனை சென்றால் அங்கே பரிந்துரைப்பதும் சாட்சாத் இட்லியேதான். நமது அன்றாட உணவுப்பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைத் தந்துவிட்டோம் இட்லிக்கு. இட்லியின் மகத்துவத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய இட்லியில் பல வெரைட்டிகளை அறிமுகப்படுத்தி அதகளப்படுத்துகிறது தி.நகர் பசுல்லா சாலையில் இயங்கி வரும் ‘ஹவுஸ் ஆஃப் இட்லீஸ்’.

இட்லி மட்டுமல்லாது, தோசையிலும் புதிய வெரைட்டிகளை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த உணவகம். காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நான் ஸ்டாப்பாக இட்லி, தோசை வெரைட்டிகளை ருசிக்கலாம் இங்கே. மதியமும் உண்டா? என்கிறீர்களா? எஸ், மதியமும் இட்லி, தோசை வெரைட்டிகளை ஒரு கை பார்க்கலாம். இட்லியிலும், தோசையிலும் புதிதாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஹவுஸ் ஆஃப் இட்லி நல்ல சாய்ஸ் என்கிறார் இந்த உணவகத்தின் உரிமையாளர் உமேஷ். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். இன்னொரு இடத்தில் வேலை பார்த்தாலும் நமக்கென்று ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

அந்த ஆசையில்தான் இட்லியை வைத்து பிஸ்னஸ் செய்யலாம் என யோசனை வந்தது. ஆரம்பத்தில் சென்னையில் சில கஃபேகளுக்கு வீட்டில் இருந்தபடியே இட்லிகள் செய்து கொடுத்து வந்தேன். சாதாரண இட்லி இல்லாமல் பொடி இட்லியும், கூடுதலாக பல வெரைட்டியும் கொடுத்து வந்தேன். கஸ்டமர்களுக்கு நான் கொடுத்து வந்த இட்லியின் சுவையும், அதன் தனித்துவமும் பிடித்துப்போனது. அதுவும் நாங்கள் கொடுக்கும் பொடியின் சுவை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கவே, வீட்டில் இருந்தபடியே இட்லிகள் தயாரித்து ஆன்லைன் டெலிவரி செய்து வந்தேன்.

இட்லி சாப்பிட நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு முன்பே எங்களுக்கு ஆர்டர் செய்து விடுவார்கள். அதேபோல பொடி இட்லிதான் எங்களின் அடையாளமாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் ஆர்டர்கள் அதிகமாக வரும்போது வீட்டில் இருந்தபடி இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை. அதனால், இந்த இட்லி பிஸ்னஸிற்கென்று தனியாக ஒரு வீடு பார்த்து, அங்கிருந்தபடி இந்தத் தொழிலை பெரிதாக்கினேன். 2015ல் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது ரெஸ்டாரென்ட் திறக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இட்லியை அடிப்படையாக வைத்து துவங்கிய உணவகம் என்பதால்தான் எனது கடைக்கு ‘‘ஹவுஸ் ஆஃப் இட்லீஸ்” என்று பெயர் வைத்திருக்கிறேன்.

அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு என்றால் அது இட்லி மட்டும்தான். அதனை மனதில் வைத்துத்தான் குழந்தைகளுக்கு பிடித்த வகையிலும், அதே நேரத்தில் இட்லிக்கு காம்போவாக குழம்புகளும் கொடுத்து வருகிறேன். பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் பொடி இட்லி என்றால் இட்லியில் மிளகாய்ப் பொடி சேர்த்து கொடுப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவும் கடையில் அரைத்த பொடியாக எல்லா இடங்களிலும் ஒரே சுவையாக இருக்கும். ஆனால், நமது ரெஸ்டாரென்டில் அந்த மாதிரி இல்லை. பொடி இட்லியில் மட்டுமே 6 வகையான பொடி இட்லிகள் இருக்கின்றன.

கறுவேப்பிலைப் பொடி இட்லி, எள்ளுப்பொடி இட்லி, தேங்காய் மிளகு பொடி இட்லி, மிளகாய்ப்பொடி இட்லி, ரசப்பொடி இட்லி, வறுத்த கறி பொடி இட்லி என அனைத்து வெரைட்டியும் இருக்கிறது. அதேபோல, இங்கு தயாரிக்கிற பொடிகள் அனைத்துமே வீட்டுத் தயாரிப்புதான். கடைகளில் கொடுத்து பொடி அரைக்கும் போது பொடி நன்றாக அரைபட்டு வரும். அப்படி நன்றாக அரைபட்ட பொடி இட்லிக்கு சுவையாக இருக்காது. பொடியை பொறுத்தவரை பொடி பாதி அரைபட்டு நறுநறுவென இருக்க வேண்டும். அதனால், கடைக்கு தேவையான பொடிகளை நாங்களே வீட்டில் வறுத்து மிக்ஸியில் அரைத்து தயார் செய்கிறோம். அப்படி செய்வதால் பொடி செய்வதற்கு தேவையான பக்குவம் சரியாக இருக்கிறது.

நமது உணவகம் காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 வரை செயல் படுகிறது. மூன்று வேளையுமே உணவுகள் தொடர் தயாரிப்பில் இருப்பதால் எந்த பொருட்களுமே ஸ்டாக் வைப்பது கிடையாது. நமது கடையில் ஸ்பெஷலாக ‘வெல்ல தோசை’ என்று ஒரு தோசையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதாவது கோதுமை மாவில் தயாரிக்கிற அந்த தோசையைச் சரியான பதத்தில் வேகவைத்த பின், அதில் பால்கோவாவும், கடலை மிட்டாயும் சேர்த்து தயார் செய்கிறோம்.

கடைக்கு சாப்பிட வருபவர்கள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். இது தோசை மாதிரி இல்லாமல் ஸ்வீட் போல இருப்பதால் குழந்தைகளும் அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இந்த தோசைக்கு சட்னிக்கு பதிலாக தேங்காய்ப்பால் கொடுக்கிறோம். அதனுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் தனிச்சுவை நன்றாகத் தெரியும். அதேபோல, தவா ஃப்ரை பட்டர் தோசையும் கொடுத்து வருகிறோம். இதுவுமே நமது கடையின் சிக்னேச்சர் டிஷ்தான். தோசைக்கு மேல் பட்டர் சேர்த்து சாப்பிடும்போது புதுவிதமான சுவையில் இருக்கும்.

புதிதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மதியம் ‘இட்லீஸ் ஃபுல் கட்டு’ என்கிற மீல்ஸை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த ஸ்பெஷல் மீல்ஸில் 20 வகையான காம்போக்கள் வரும். வடை, பாயாசத்தில் தொடங்கி ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் என அனைத்தும் சேர்த்து இந்த மீல்ஸில் வரும். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி இந்த மீல்ஸை ஆன்லைனில் விற்பனை செய்து வந்தேன்.

இப்போது நமது உணவகத்தில் இந்த காம்போ கிடைக்கிறது. இந்த மீல்ஸை பார்சல் செய்து கொண்டு போவதற்காகவே தனியாக பாக்ஸ் ஒன்றையும் தயாரித்திருக்கிறோம். மீல்ஸிற்கு அடுத்தபடியாக பல வெரைட்டி சாதங்களையும் கொடுத்து வருகிறோம். இப்படி ஒவ்வொரு உணவையும் செய்வதில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வரை அனைத்திலும் தனிக்கவனம் செலுத்துகிறோம். சேப்பங்கிழங்கு ப்ரை, சில்லி புரோட்டா, சேனைக்கிழங்கு ப்ரை, ரசம் வடை, மோர்க்குழம்பு போண்டா, கதம்பம் பக்கோடா, தயிர்வடை என பல வெரைட்டி இங்கு கிடைக்கிறது.

பலருக்கு பிடித்தமான மட்கா தயிர் சாதத்தையும் கொடுத்து வருகிறோம். வழக்கமாக எல்லா உணவகங்களிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் வைப்பார்கள். ஆனால், நமது உணவகத்தில் பூண்டுக்குழம்பு, வத்தக்குழம்பு, தேங்காய்ப்பால் என தனித்தனியாக, அதாவது எந்த இட்லிக்கு எந்த குழம்பு நன்றாக இருக்குமோ அதை கொடுக்கிறோம். குறிப்பாக இட்லி வித் பூண்டுக் குழம்பு அனைவருக்கும் பேவரைட்.

இதுபோக, டின்னருக்கு ஸ்பெஷலாக அடை அவியல், கூழ் தோசை, ஜவ்வரிசி அடை, அரிசி உப்புமா என பல வெரைட்டியும் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு பிடித்த குழிப் பணியாரம், மினி பொடி இட்லி, சீஸ் ஊத்தாப்பம், கேரட் ஊத்தாப்பம், சீஸ் சேப்பங்கிழங்கு ப்ரை என அனைத்துமே கொடுக்கிறோம். உணவுத் துறையில் பல வருட அனுபவம் இருக்கிறது. அதனால் வருமானம் என்பதை தாண்டி வாடிக்கையாளர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைக் கொடுப்பதில் முழு திருப்தி அடைகிறோம். நாம் கொடுக்கிற உணவுகளை மற்றவர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதுவே போதும்’’ என மனநிறைவுடன் பேசுகிறார் உமேஷ்.

– ச.விவேக்
படங்கள்: ஆ. வின்சென்ட் பால்

The post தயிர்… பொடி… ரவா… பொடிசா… appeared first on Dinakaran.

Tags : Idli ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!