×

இறுதிவேதம் அருளப்பட்டது ஏன்?

இஸ்லாமிய வாழ்வியல்

வேதங்களில் இறுதியானது திருக்குர்ஆன். இறுதி வேதம் எதற்காக அருளப்பட்டது? இந்தக் கேள்விக்குத் திருமறையே தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.

நேர்வழி பெறுவதற்காக

இறைவனிடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது. இறைவனின் உவப்பை விரும்புவோர்க்கு இறைவன் அதன்மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு, இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டுவருகிறான். இன்னும், அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கிறான். (குர்ஆன் 5:15-16)

கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக

(சத்தியம் பற்றி) இவர்கள் எவற்றில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறார்களோ, அவற்றின் உண்மை நிலையை இவர்களுக்கு நீர் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேதத்தை உம்மீது நாம் இறக்கி அருளியிருக்கிறோம். (குர்ஆன் 16:64)

இதய நோய்க்கு இனிய மருந்தாக

மனிதர்களே…! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும் தன்னை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்கு வழிகாட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கிறது. (குர்ஆன் 10:57)

நல்லுரை – படிப்பினைக்காக

இது (குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே

இருக்கிறது. (குர்ஆன் 68:52)

நபியே, நீர் கூறுவீராக. மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே யாரேனும் நேர்வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை அளிக்கும். யாரேனும் வழிகெட்டுப் போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும். (குர்ஆன் 10:108)

இறைவன் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கிறான். ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும் உள்ளமும் மென்மையாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். (குர்ஆன் 39:23)

நீங்கள் துன்பத்திற்கு உள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம் மீது நாம் இறக்கி அருளவில்லை. இதுவோ அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டல் ஆகும். (குர்ஆன் 20:2-3)

நாம் தெள்ளத் தெளிவாக வழிகாட்டும் வசனங்களை உங்களுக்கு அருளி இருக்கின்றோம். உங்களுக்கு முன்சென்ற சமூகங்களின் (படிப்பினை மிக்க) எடுத்துக்காட்டுகளையும் நாம் உங்கள் முன்வைத்துள்ளோம். மேலும், இறையச்சம் கொள்ளக்கூடியவர்களுக்குப் பயனளிக்கும் நல்லுரைகளையும் நாம் வழங்கியுள்ளோம். (குர்ஆன் 24:34)

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“நாம் இந்தக் குர்ஆனை எதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி அருளினோம் எனில், நீங்கள் இதை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். மேலும், இதனை நாம் படிப்படியாக இறக்கிவைத்தோம்.” (குர்ஆன் 17:106)

The post இறுதிவேதம் அருளப்பட்டது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Vedas ,Thirubhaya ,
× RELATED நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள்