×

சிங்கார சென்னை 2.0 திட்டம்… ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா..!!

சென்னை: விக்டோரியா பொது அரங்கில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் 20.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விக்டோரியா பொது அரங்கில் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்படும் பணிகள், கட்டடத்தின் உறுதித்தன்மை மாறாமல் மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு குறித்தக் காலத்தில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சிங்கார சென்னை 2.0 திட்டம்… ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா..!! appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,CHENNAI ,Victoria Public Hall ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!