
அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 13
ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்
லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை
ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா
க்ரோதா காராங்கு ஸோஜ்வாலா இதற்கு முன்னர் சொல்லப்பட்ட நாமமான ராகஸ்வரூப பாசாட்யா என்பதற்கு பொருள் பார்க்கும்போதே சம்பத்கரி தேவியையும் பார்த்தோம். இப்போது மீண்டும் இதை நினைவு படுத்துகின்றோம். குரோதம், மதம், மாச்சரியம் இவை மூன்றும் வெறுப்பு என்கிற துவேஷத்தினால் வெளிப்படக் கூடியது. இவை எல்லாவற்றிற்கும் மூலமாக ஆசை எனும் எண்ணமே காரணமாக உள்ளது. அதற்கும் மூலமாக நான் எனும் தடித்த எண்ணம் அகங்கார வடிவில் எப்போதும் உயிர்த்தபடி உள்ளது.
கோப, குரோதங்கள் என்பது உள்ளே அழுத்தி பெரும் யானை போன்று அமர்ந்திருக்கும். இப்படி பெரும் கனத்தோடு உள்ளே இருப்பதால் யானையாகவும் சொல்லப்படுகின்றது. இந்த குரோதம் எனும் யானையை அடக்குவதற்காகவே அங்குசம் உள்ளது. எனவே, குரோதத்தின் உருவமான அங்குசத்தை தரிப்பதால் ஒளியோடு விளங்குகிறாள் என்று நேரடியான பொருளையே இந்த நாமம் கூறுகின்றது.
மனம் தான் எதை நாடிச் செல்கிறோமோ அல்லது அந்தப் பொருளை அடைய முடியாவிட்டாலோ ஏற்படும் சித்த விருத்திக்கு வெறுப்பு என்று பெயர். இந்தக் குரோதமே அங்குசமாக வடிவெடுத்து ஆணவத்தின் வெளிப்பாடான குரோதத்தை அடக்குகின்றது. இந்த குரோதம் என்னும் விஷயத்தை நமக்கு உண்மையில் கையாளத் தெரியாது. அதாவது இந்த அகங்காரத்திற்கு தெரியாது. எனவே, அந்த குரோதத்தை எப்படி கையாளுவது என்பதை அம்பாளிடமே விட்டுவிட வேண்டும். அப்படி விட்டுவிட்டால் அவளே அந்த அங்குசம் என்கிற சக்தியைக் கொண்டு அடக்கி விடுவாள்.
இன்னொரு விதமாகவும் இதை பார்க்கலாம். குரோதம் என்பதைத்தாண்டி இன்னொரு பொருளும் சொல்லப்படுகின்றது. குரோத ஆகார அங்குஸோஜ்வாலா என்கிற வரியில் குரோத ஆகாரம் என்பது விஷய ஞானத்தை குறிக்கின்றது. நாம் பிரபஞ்சத்தில் பார்க்கின்ற எல்லா விஷயங்களும் கண்களின் வழியே மனதிற்குள் செல்கின்றது. மனம் பார்க்கின்ற பொருட்களிலிருந்து வரும் சிற்றின்பங்களை பதிவு செய்து வைக்கின்றது. இந்த இன்பங்களே நிரந்தரம் என்று நினைக்கின்றது. ஏனெனில், பதிவு செய்த விஷய ஞானமே மீண்டும் மீண்டும் வேண்டுமென்று கேட்கின்றது.
இப்படியாக மனம் அறியும் விஷய ஞானத்தையே நிஜமான பொருள்போல் நம்பி மீண்டும்.. மீண்டும்… இந்த விஷயங்களையே சேர்த்துக் கொண்டே செல்கின்றது. அதனால் எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் துண்டு துண்டான அறிவைச் சேகரித்து முழுமையான பேரறிவை தனக்குத்தானே தடுத்து நிறுத்துகின்றது. விஷய ஞானம் என்பது மனதில் ஏற்கனவே இந்த அகங்காரத்தின்படி விருப்பு வெறுப்புகளால் சேகரிக்கப்பட்ட அறிவே ஆகும்.
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், நம் மனதால் சேகரிக்கப்பட்ட அனுபவங்கள், இந்த உலகியல் வாழ்வில் இப்போது அனுபவிக்கும் அனைத்துமே விஷய ஞானங்கள்தான். உங்கள் மனதினால் எதையெல்லாம் உணர முடிகின்றதோ அவையெல்லாமுமே எல்லைக்குட்பட்டவை. அது எவ்வளவு பெரிய விஷயமானாலும் சரிதான். இவையே உங்களுக்குள் சேகரமாகும். இந்த அறிவினால் பேரறிவை அறிய இயலாது. இந்த அறிவை அகற்றினால் மட்டுமே உள்ளபடி இருக்கும் பேரறிவான அம்பிகையை அறிய முடியும்.
எனவே, நம் மனதினாலும், அகங்காரத்தினாலும் சேகரிக்கப்பட்ட அறிவு என்பது யானைக்கு ஒப்பானதாகும். கனமானதாகும். அதை அடக்கி ஒடுக்கி சரியான வழிக்கு செல்வதற்கு அம்பிகையின் கையில் இருக்கும் அங்குசம்தான் சரியான ஆயுதமாகும். அந்த அங்குசமாகவே இருப்பவளே சம்பத்கரி தேவி. எனவே, சம்பத்கரி தேவியின் சொரூபத்தையே இந்த நாமம் எடுத்துப் பேசுகின்றது.
அமரரான ஸ்ரீவித்யா உபாசகர் சாக்த ஸ்ரீபரணிகுமார் அவர்கள் இந்த சம்பத்கரி தேவியைப்பற்றி கூறுவதையும் பார்ப்போம். லலிதாம்பிகையின் யானைப் படைத்தலைவி இந்த ஸம்பத்கரி தேவி. கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ, சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட ஸம்பத்கரி பரமேஸ்வரி, தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளையும் வாரி வழங்கி அருள்பாலிக்கிறாள். தேவியின் வாகனமான யானையின் பெயர் ரணகோலாஹலம்.
கோடிக்கணக்கான யானைகள் பின் தொடர, சகல அஸ்திரங்களும் தேவியைப் பாதுகாத்தபடி சூழ்ந்து வர, தேவி தன் வாகனமான ரணகோலாஹலம் எனும் யானையின் மீதேறி அருட்கோலம் காட்டுகிறாள். அதுவரை லட்சுமி கடாட்சம் கிட்டாதவர்களுக்குக் கூட இந்த தேவியின் அருளால் நிச்சயம் கிட்டும் என்பதை தேவி ஆரோகணித்து வரும் யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாமரை மலர்ந்து உணர்த்துகிறது.
ஒரு யானையைக் கட்டி தீனி போடுவதற்கே பெருஞ்செல்வம் வேண்டும். கோடிக்கணக்கான யானைகளைக் காப்பாற்றும் அளவிற்கு பெருஞ்செல்வம் கொண்டவள் இத்தேவி எனில் இந்த அம்பிகையின் செல்வ வளத்தை அறியலாம். அந்த செல்வ வளங்களை தன்னை உபாசனை புரியும் பக்தர்களுக்கும் வாரி வாரி வழங்கும் பரம கருணாமூர்த்தினி இவள்.
லலிதாம்பிகையைப் போற்றும் சக்தி மஹிம்ன துதியில் மிக வீர்யம் உள்ளதும் வெற்றியுடன் விளங்கக்கூடியதுமான உனது அங்குசத்தை தன் உள்ளத்தில் எவன் தியானிக்கிறானோ அவன் தேவர்களையும் பூவுலகில் ஆள்பவர்களையும் எதிரி சைதன்யங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவனாகவும் விளங்குவான் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு பெருமை பெற்ற லலிதையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி இந்த ஸம்பத்கரிதேவி.
யானையின் மதத்தை அடக்க அங்குசம் உதவுவதுபோல, நான் எனும் மதத்தை தேவி அடக்குகிறாள். யானையைப் பழக்கிவிட்டால் அது எவ்வளவோ நல்ல பணிகளுக்கு உதவுவது போல, இந்த தேவியும் தன்னை அன்பாக வழிபடும் பக்தர்களின் வாழ்வில் மங்களங்கள் சூழ செல்வவளம் பெருக்குகிறாள். யானையும் குதிரையும் எங்கேயோ காடுகளில் இல்லை. நமக்குள்ளேயே மனமாகவும், அகங்காரமாகவும் உள்ளன. இரண்டையும் பழக்கப்படுத்தி பக்குவமாக்க வேண்டும்.
அம்பிகையை அடைவதற்கு முன், குதிரையைப் பழக்குவது போல், நம் மனதைப் பழக்கி, யானையின் மதத்தைக் கட்டுப்படுத்துவது போல நம் அகங்காரத்தையும் ஒடுக்க வேண்டும் என்பதே இந்த தேவியரின் தத்துவம் விளக்குகிறது.
(சக்தி சுழலும்)
நாமம் சொல்லும் கோயில்
சாக்த தந்திர சாஸ்திரங்கள் இந்த நாமத்திற்கான கோயிலாக திருவிடை மருதூரைத்தான் சொல்கின்றன. இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசனது பெயர் மகாலிங்கேஸ்வரர் என்பதாகும். இரண்டு மருத மரத்திற்கு நடுவே ஈசன் வெளிப்பட்டதால் இடைமருதூர் என்கிற பெயர் வந்தது. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்தபோது அத்வைதமே சத்தியம் என்று ஈசனுக்குள்ளிருந்து ஒரு கை வெளிப்பட்டுச் சொன்னது.
மாபெரும் பிராகாரத்தை கொண்ட தலம் இது. அம்பிகைக்கு பிரகத் சுந்தர குஜாம்பிகை என்று பெயர். மேலும், பாஸ்கரராயரால் இங்கு கோயிலுக்குள்ளேயே மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே கர்நாடகா மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ளதுபோல் மூகாம்பிகை சந்நதி உள்ளது. மனநோயால் அவதிப்படுவோர் இக்கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் அதிசீக்கிரம் அதிலிருந்து விடுபடுவார்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்
நம்முடைய வெற்றியை சில சமயம் நமது அகங்காரமே தடுக்கும். என்னால் எல்லாமும் சாதிக்க முடியும். என் முயற்சியே என் வெற்றிக்கு காரணம் என்று நாம் நினைப்போம். ஓரளவு வரை அது உண்மையாக இருந்தாலும், இறுதியில் ஏதோவொன்று ஒரு சக்தி நம்முடைய வெற்றியில் பெரும் பங்காற்றுகின்றது. எனவே, வெற்றியை தடுக்கும் தீய சக்தியை இந்த நாமம் முடக்கிப்போடுகின்றது. தீய வினைகளை முடக்கிப்போடும் நாமமே இதுவாகும்.
The post வெற்றியை துரிதமாக்கும் சம்பத்கரி தேவி appeared first on Dinakaran.