×

தெளிவு பெறு ஓம்: நாம் தினசரி நிவேதனமாகப் படைக்கும் பொருள்களை கடவுள் சாப்பிடுவாரா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இறைவனை எங்கே தேட வேண்டும்?

பதில்: இறைவனை மிக முக்கியமாக அவரவர்கள் தங்கள் உள்ளத்தில் தேட வேண்டும். ‘‘வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்தில் மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர்’’ என்று ஒரு ஆழ்வார் பாடுகின்றார். திருவேங்கடத்தில் இருக்கக்கூடிய பெருமாளும், பாற்கடலில் இருக்கக்கூடிய பெருமாளும் என்னுடைய உள்ளத்திலே இருக்கிறார் என்பது இந்தப் பாடலின் பொருள். இந்த அனுபவம் கிடைக்க வேண்டும். அதை நோக்கி படிப்படியாக நகர வேண்டும். அதற்குத்தான் ஆன்மிகம். ஒருவர் தங்க காசு தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தார். அவர் தேடுவதைக் கண்ட மற்றொருவர், ‘‘என்ன தொலைத்து விட்டு தேடுகிறீர்?’’ என்றவுடன்,‘‘தங்கக் காசை தொலைத்து விட்டேன்’’ என்றார். அடுத்த கேள்வி அவர் கேட்டார்.

‘‘எங்கே தொலைத்தீர்?’’ ‘‘வீட்டில் தொலைத்து விட்டேன்’’. ‘‘பின் எதற்கு இங்கே தேடுகிறீர்? தொலைத்த இடத்தில் தேடினால் அல்லவோ கிடைக்கும்’’ அப்பொழுது அவர் சொன்ன பதில் முக்கியமானது.‘‘நீங்கள் மட்டும் என்ன செய்கிறீர்கள்? இறைவனை இதயத்தில் வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடுகிறீர்களே’’.

? நாம் தினசரி நிவேதனமாகப் படைக்கும் பொருள்களை கடவுள் சாப்பிடுவாரா?
– அஸ்வின்குமார், தென்காசி.

பதில்: நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். “இறைவா, இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து, உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி’’ என்று அறிவிப்பதே நிவேதனமாகும். வைணவத்தில் “கண்டு அருளச் செய்தல்’’ என்பார்கள்.பல மஹான்கள் தந்ததை இறைவன் சாப்பிட்டதாக பல தகவல்கள் உண்டு. ராமனுஜர், அரங்கனுக்கு படைக்கப்பட்ட நிவேதனம் வரும்போது பார்ப்பாராம், அதில் ஏதேனும் ஒரு நகக்குறியாவது இருக்கிறதா என்று பார்ப்பாராம். இறைவன் சாப்பிடுவாரா, சாப்பிட்டதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை உணர ஒரு கதை.

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் இதே மாதிரி கேள்வி கேட்டான்.‘‘குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள், படையலை சாப்பிடுவாரா?” என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவிப் பார்த்துவிட்டு ‘‘நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருந்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு. அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உருப்போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.
குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.
“மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா?” என்றார்.
“மனப்பாடமாகிவிட்டது குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்” கண்கள் மூடி மனதை ஒருநிலைப் படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்
‘‘பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான். மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்;

‘‘நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாகத் தெரியவில்லையே. எங்கே உனது புத்தகத்தை காட்டு” பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தைக் காண்பித்து கூறினான்.“குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால், நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.
‘‘ஆம்’’

“இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக் கொண்டால் புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா?”
சிஷ்யன் குழப்பமாகப் பார்த்தான். குரு தொடர்ந்தார்.“உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்குப் படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும், அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான், இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்தியத்தை உட்கொள்கிறோம்.

? யாரை இந்த உலகம் கொண்டாடும்?
– ரங்கநாதன், ஆரணி.

பதில்: காலத்தைக் கொண்டாடுபவர்களை இந்த உலகம் கொண்டாடும். மற்றவர்களை காலம் வெறுமனே கொண்டு போகும். தொலைத்த பொருளை நீங்கள் மறுபடியும் பெற்றுவிடலாம். ஆனால், தொலைத்த காலத்தை எப்படி மறுபடியும் பெறுவீர்கள்? இதைத்தான் ஒரு ஆழ்வார், “ஐயோ காலமெல்லாம் போய்விட்டதே’’ என்று அழுகின்றார். ‘‘பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்’’ என்று உருக்கமாகப் பாடுகின்றார். இப்படி காலத்தை பயனில்லாது வீணாகக் கழித்து விட்டோமே என்பது புரிந்துவிட்டால், இருக்கும் காலத்தை ஒரு மனிதன் செம்மையாகப் பயன்படுத்த முடியும்.

? பேசும்போது ‘‘டக்’’ என்று கோபம் வந்து விடுகிறது. பிறரைக் காயப்படுத்தும்படியாக வார்த்தைகள் கொட்டி விடுகிறோமே? இதைத் தவிர்க்க முடியாதா?
– செண்பகவள்ளி, மானாமதுரை.

பதில்: ஏன் தவிர்க்க முடியாது? ஹிட்லர் படையால் பாதிக்கப்பட்டு ஒரு சிறுமி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தின் வரியை ஒவ்வொரு மனிதனும் பின்பற்றினால், கோபமோ, பிறர் மனதை புண்படுத்துகின்ற வார்த்தையோ வாயிலிருந்து வரவே வராது. அது என்ன வரி தெரியுமா.‘‘நான் யாருடன் இனிப் பேசினாலும், அது அவர்களுடன் பேசும் கடைசி பேச்சாக இருந்தால் எப்படிப் பேசுவேனோ, அப்படித்தான் பேசப் போகிறேன்’’. இப்படி முடிவெடுத்துக் கொண்டு பேசினால் கோபம், பிறரை காயப்படுத்தும் வார்த்தைகள் வராது. இன்னும் நன்றாக புரிந்து கொள்வதற்கு ஒரு கதை இருக்கிறது.

ஒரு வயதானவரை ஒருவர் திட்டி விடுகின்றார். பிறகு நினைத்துப் பார்க்கின்றார். ‘‘ஆகா, நான் அந்த வயதான மனிதர் மனம் வருந்தும்படியாகத் திட்டி விட்டேனே… யோசித்துப் பாத்தால் அவர் மீது ஒரு தவறும் இல்லையே… நான் ஏன் அவசரப்பட்டு திட்டினேன்.’’

மனசு சரியில்லாமல் தூங்கப் போகின்றார். தூக்கமும் வரவில்லை. ‘‘விடிந்தவுடன் அவர் வீட்டுக்குப் போய் அவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று நினைக்கிறார். காலையில் எழுந்து அவர் வீட்டுக்கு போகும் பொழுது அவர் வீட்டு வாசலிலே பச்சைப் பந்தல் போட்டு இருக்கிறது. உறவினர்கள் வந்து அமர்ந்திருக்கிறார்கள். என்னவென்று விசாரிக்கிறார். ‘‘ம். எவனோ ஒரு பாவிப்பயல், வயதானவர் என்றும் பாராமல் பேசியிருக்கிறான். மனது மிகவும் நொந்து போய் படுத்தவர்… திடுக் என மாரடைப்பில் போய்விட்டார்’’ என்று சொல்ல அப்படியே மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

? அறிவை அடைவதற்கான வழி என்ன?
– சந்தோஷி, பெரம்பலூர்.

பதில்: ஒன்று பெற வேண்டும் என்று சொன்னால் அது நம்மிடம் இல்லை என்ற உணர்வு வேண்டும். ஆனால், பெரும்பாலும் நாம் எப்படி இருக்கிறோம் என்று சொன்னால், நமக்கு தெரியாதது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பது போல் நினைத்துக் கொள்கிறோம். அறியும் தோறும் அறியாமை என்று ஒரு அழகான வார்த்தை உண்டு. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது, ‘‘அடடா, இதுவரை இந்த விஷயத்தை நான் யோசித்துப் பார்க்கவில்லையே, தெரிந்து கொள்ளவில்லையே’’ என்று நாம் நினைப்போம். அப்படியானால், “நமக்கு முழுமையான அறிவு கிடைக்கவில்லை. நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடவில்லை” என்பதுதான் பொருள். இந்த மனநிலையோடு இருந்தால்தான், புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். கதை ஒன்று உண்டு.

மிகவும் படித்த ஒருவர் தனக்கு ஆத்ம விஷயத்தைக் கூற வேண்டும் என்று ஒரு குருவிடம் போனார். அவரிடம், தான் படித்த பல புத்தகங்களைப் பற்றி நிறையச் சொல்கின்றார். அந்த குரு பொறுமையோடு கேட்டுவிட்டு சொன்னாராம்;‘‘ஏற்கனவே உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு காலி டம்ளரோடு வா’’.

அப்படியானால் என்ன பொருள்? நாம் ஏற்கனவே பல விஷயங்களை மூளையில் நிரப்பிக் கொண்டு இருப்போம். ஏற்கனவே நீர் நிரம்பிய டம்ளரில் புதுநீர் எப்படி நிரப்ப முடியும்? எனவே, தெரியாது என்று உணர்வது ஒன்றே அறிவை அடைவதற்கான ஒரு வழி.

?மனிதனுடைய வலிமையை அழிக்கக் கூடிய விஷயங்கள் எது?
– பாலசுந்தரி, நாகை.

பதில்: மனிதனுடைய வலிமையை அழிப்பது மூன்று விஷயங்கள்தான். ஒன்று அச்சம். இரண்டாவது கவலை. மூன்றாவது நோய். நோய் என்பதில் உடல் நோயை விட மனநோய் மிக முக்கியமானது. அனேகமாக பலரும் இந்த மனநோயோடுதான் இருக்கின்றார்கள். சதவீதம்தான் கொஞ்சம் வேறுபடுகிறது.

? ராகு என்றாலே அச்சமாக இருக்கிறதே? உண்மையிலேயே ராகு திசை மோசமான திசையா? ராகு நல்லதை செய்யமாட்டாரா?
– அக்‌ஷதா, கும்பகோணம்.

பதில்: நாம் சரியாக இருந்தால் எந்த திசையைப் பார்த்தும் நடுங்க வேண்டியதில்லை. இருப்பினும், ராகு திசையைப் பற்றி சில விஷயங்களைச் சொல்கின்றேன். ராகு பாம்பு கிரகம். பாம்பின் தலை ராகு. வால் கேது. இதற்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைந்தால் கால சர்ப்ப யோகம் அல்லது தோஷம் என்று அமைப்பைப் பொறுத்துச் சொல்வார்கள். ராகு, நமது தாத்தாவிற்கு காரகன். குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது, ஆணின் உயிரணுவில் உள்ள Y குரோமோசோம். நமது தந்தை வழி தாத்தா, தாத்தாவிற்கு அப்பா என்று ஒரு வரிசையில் நாம் செல்லும்போது, நமது பிறப்பிற்கு காரணம், ராகுவே என்று புரிந்துவிடும்.

அதனால்தான் நமது ஆத்மா காரகன் சூரியன், ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நீசமாகிறார். ராகுவிற்கு புதன் – சுக்கிரன் – சனி நண்பர்கள். குரு – சூரியன் – சந்திரன் பகைவர்கள். ராகு ஓரக்கண் பார்வை உடையவர். ராகு ஜாதகத்தில் பலம் பெற்றவர்கள் சூதாட்டம், லாட்டரி போன்ற திடீர் லாபம் பெறுவார்கள். ஊரை ஏமாற்றி பெரும் பணக்காரர்கள் ஆவது எல்லாமே ராகு பகவான் வேலைதான். சுக்கிரன் – ராகு சேர்க்கையை, தகாத இன்ப வழிகளில் கொண்டு போகும்.

ராகுவின் நட்சத்திரங்கள் காம திரிகோண ராசிகளில் மட்டுமே வரும். எனவே ராகுவின் தன்மை, இன்பத்தை பொறுத்தே அமையும். அது உயிர் இன்பமா அல்லது பொருள் இன்பமா என்று பிரித்துப் பார்க்கவேண்டும். எது எப்படியிருந்தாலும், நல்ல எண்ணங்களோடு பகவானின் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக வாழுங்கள். விஷத்தை கொடுக்கும் ராகு, மாணிக்கத்தையும் தருவார்.

? பெரும்பாலான சாலை விபத்துகள் கோயிலுக்குச் சென்று திரும்பும் போது, நடக்கிறதே?
– விஷ்னுஸ்ரீ, ராமநாதபுரம்.

பதில்: இன்றைய நவீன காலத்தில் அதிவேக போக்குவரத்தால் விபத்துக்கள் நிகழ்கின்றன. எல்லா இடங்களுக்கும் போய் வரும் போதும் விபத்து நடந்தாலும், கோயிலுக்குப் போய் வரும் போது நடைபெறும் விபத்துக்கள் சிறப்பு கவனம் பெறுகின்றன.இதை இப்படியொரு கோணத்தில் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் கோயிலுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள் அவசர பயணம் செய்வார்கள். முதல் நாள் வரை வேலை செய்துவிட்டு, சரியாகத் தூங்காமலும், ஓய்வு எடுக்காமலும், பயணம் மற்றும் கூட்ட நெரிசல்களாலும் மிகவும் களைப்பாகவே பயணம் செய்வார்கள்.

ஓட்டுனரும் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த நிர்ப்பந்த சவாரி வந்திருப்பார். கோயிலுக்குச் சென்று திரும்பும் போது ஓட்டுனருடன் பேசக் கூட ஆள் இல்லாமல், தூங்கிவிடுவார்கள். இதனால், ஓட்டுனரும் வாகனத்தை இயக்கம் போதே தூங்கிவிடுவார். இதனால்தான் நிறைய விபத்துக்கள் உண்மையில் நடக்கிறது. நம் ஏற்பாட்டில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்ளாமல், தெய்வத்தோடும், ஆன்மிகத்தோடும் முடிச்சி போடுவதும், அதற்கொரு அர்த்தத்தைக் கற்பிப்பதும் தவறு.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம்: நாம் தினசரி நிவேதனமாகப் படைக்கும் பொருள்களை கடவுள் சாப்பிடுவாரா? appeared first on Dinakaran.

Tags : Saffron ,Clarity Ohm ,
× RELATED மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!