×

நான்கு சிங்கங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அகோபில மடம்! உத்தமர்கள் பலர் பீடாதிபதிகளாக இருந்து, அருளாட்சி நடத்திய ஞான பீடம்! அந்த ஞான புருஷர்களில் ஒருவர் ஸ்ரீசடகோப யதீந்திர மகாதேசிகன் எனும் ஜீயர். இவர் லட்சுமி – நரசிம்மரை நேருக்குநேராகத் தரிசித்தவர்! இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு…ஜீயர், கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் செய்தபோது, ஓர் அடர்ந்த காட்டின் வழியாகச் செல்ல நேர்ந்தது. பூஜை செய்யப்படும் தெய்வ விக்கிரகங்கள், அந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரணப்பெட்டி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுடன், சீடர்களும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போன அந்தப் பகுதியில், கொள்ளையர்கள் அதிகமாக இருந்தார்கள். அந்தி சாயும் நேரம்! போய்க் கொண்டிருந்த வழியில், ஓர் அழகான குளத்தையும், சற்றே சமமான நிலப் பகுதியையும் கண்ட ஜீயர், தம் கூட வந்த பரிவாரங்களை நோக்கி, ‘‘நாம் இங்கேயே இந்த இரவில் தங்கி, நாளை காலை புறப்படலாம்’’ என்றார்.கூட வந்தவர்களுக்கோ, அடி வயிறு கலங்கியது; ‘‘இந்த அடர்ந்த காட்டில் எப்படித் தங்குவது? இது கொள்ளையர் கோட்டை ஆயிற்றே? மேலும், காட்டு விலங்குகளின் நடமாட்டமும் அதிகம். எந்த நேரமும் ஆபத்து உண்டாகுமே!’’ என்று நினைத்தார்கள். குருநாதரிடம் சொல்லவும் பயம்! ‘‘சரி! குருநாதருக்குத் தெரியாதா என்ன?’’ என்று சும்மா இருந்து விட்டார்கள்.

பொழுது சாய்ந்தது. மாலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்ட ஜீயர், இரவு பூஜையையும் முடித்தார். அதன் பின், தீவட்டிகளின் வெளிச்சத்தில் இரவு உணவு முடிந்து, அனைவரும் உறங்கப் போகும் நேரம்! வெளியில் ஒரு சலசலப்பு சத்தம் கேட்டது. பார்த்தால்… கொள்ளைக்காரர்கள் சுற்றிக்கொண்டு விட்டார்கள். ‘‘மரியாதையாக, உங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம், நீங்களாகவே தந்து விடுங்கள்! இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்!’’ என்றார்கள் திருடர்கள். கூட இருந்தவர்கள் எல்லாம் நடுங்கினார்கள். ஆனால் ஜீயரோ, கொஞ்சம் கூடப் பதட்டம் இல்லாமல் அமைதியாகவே இருந்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனை அருகே அழைத்து, ‘‘அப்பா! நான் வழிபடும் கடவுள் இதுதான்.

இதோ! இந்த ஆபரணங்கள் எல்லாம், இந்தக் கடவுளுக்குச் சொந்தமானவை. ஆகையால், இந்த நகைகளைத்தர எனக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமானால், நீயாகவே எடுத்துக்கொள்! இருந்தாலும், இவற்றை எல்லாம் நீ கைப்பற்றும் முன், இதோ! தொட்டிலில் உள்ள என் பகவானுக்கு, கடைசியாக ஒருமுறை எல்லா நகைகளையும் பூட்டிப் பூஜை செய்து, நான் தரிசித்த பின், நீயே எடுத்துக்கொள்!’’ என்றார். கொள்ளையர் தலைவனும் சம்மதித்தான்.

வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நைவேத்தியத்திற்காகச் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யபட்டது. நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்தில், வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. தீபாராதனை காட்டி முடித்தார்கள். அதுவரை சற்று தள்ளியிருந்த கொள்ளையர் தலைவன், அருகில் நெருங்கி வந்தான். தான் போர்த்தியிருந்த கம்பளியைக் கீழே விரித்தான். அந்தக் கம்பளியில் திருவாபரணங்கள் அனைத்தையும் எடுத்து வைத்தார்கள்.

அவற்றைப் பார்த்த கொள்ளையர் தலைவன் வியந்தான்; ‘‘ஆ! எவ்வளவு! எவ்வளவு! விலை மதிப்பில்லாத இவ்…வளவு ஆபரணங்களா?’’ என்று வாய்விட்டுச் சொன்னபடியே, அவ்வளவு ஆபரணங்களையும் மூட்டையாகக் கட்டினான் கொள்ளையர் தலைவன். இனிமேல் என்ன? தூக்கிக் கொண்டு ஓட வேண்டியதுதான்! ஆனால், பகவானின் ஆபரணங்கள் அடங்கிய அந்த மூட்டையைக் கொள்ளையர் தலைவனால் தூக்க முடியவில்லை. மிகவும் கனமாக இருந்தது. அருகில் இருந்த தன் அடியாட்களை அழைத்தான் அவன்.

பாதுகாப்பு வளையம் போலச் சில கொள்ளையர்கள் சுற்றி நிற்க, மற்ற கொள்ளையர்கள் எல்லோரும் வந்து, ஆபரணங்கள் அடங்கிய மூட்டையைத் தூக்க முயன்றார்கள். ஊஹும்! முடியவில்லை. அதே சமயம், பாதுகாப்பு வளையம்போல வெளியே நின்றிருந்த கொள்ளையர்கள், ‘‘ஆ!… ஊ!…’’ என்று கத்தியவாறே, ஆளுக்கொரு பக்கமாக ஓடத் தொடங்கினார்கள். ஆபரண மூட்டையின் அருகில் இருந்தவர்களும், பயங்கரமாக அலறித் துடித்துத் தாறுமாறாக ஓடத் தொடங்கினார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே, கள்வர்கள் எல்லோரும் அங்கங்கே, தரையில் விழுந்து உருண்டு புரண்டு கதறினார்கள்.

கருணையின் வடிவான ஜீயர், கள்வர்கள் படும் துயரத்தைப் பார்த்தார்; தாங்க முடியவில்லை அவரால்; ‘‘லட்சுமி நரசிம்மா! இவர்களை மன்னித்து விடு!’’ என்று வேண்டியவாறே, பகவானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தப் பிரசாதத்தை எடுத்து, கள்வர்கள் மீது தெளித்தார். தெளிவு பெற்றார்கள் கள்வர்கள். அத்தனை பேர்களும் ஒன்றாக, ஜீயரின் திருவடிகளில் விழுந்தார்கள்.

‘‘ஐயா! மன்னியுங்கள் எங்களை! கோடிப் புண்ணியம் உங்களுக்கு! உயிர்ப்பிச்சை கொடுத்தீர்கள்!’’ என்றான் கள்வர் தலைவன்.‘‘என்னப்பா! என்ன ஆயிற்று? நீ விரும்பிய உன் மூட்டைதான், இதோ இருக்கிறதே!’’எனக்கேட்டார் ஜீயர்.

கண்களில் கண்ணீர் வழியக் கைகளைக் கூப்பியவாறு, கள்வர் தலைவன் சொல்லத் தொடங்கினான்; ‘‘ஐயா! உங்கள் நகைகளோ பணமோ, எதுவுமே வேண்டாம் எங்களுக்கு. கொஞ்ச நேரத்திற்கு முன்னால், எங்கள் ஒவ்வொருவரையும் சுற்றி, நான்கு சிங்கங்கள் பயங்கரமாக வாயைப் பிளந்தபடி, எங்களைத் துரத்தின. நல்லவேளை! அவையெல்லாம் நீங்கள் தெளித்த நீரால், விலகி ஓடிப்போய் விட்டன.

ஐயா! இன்று இரவு, நாங்கள் எல்லோரும் இங்கேயே உங்களுடன் தங்குகிறோம். தயவுசெய்து அனுமதியுங்கள்! பயமாக இருக்கிறது’’ என வேண்டினான் கள்வர் தலைவன். ஜீயர் ஒரு மகான் என்பதைப் புரிந்து கொண்டான் அவன்.‘‘அப்படியே ஆகட்டும். இருங்கள் இங்கேயே!’’ என்றார் ஜீயர். மறுநாள் காலை! கொள்ளையர் தலைவன் உட்பட, அவன் கூட்டம் முழுதும் ஜீயருக்குப் பாதுகாவலாகக் காட்டின் எல்லை வரை சென்று, ஜீயரையும் அவர் குழுவினரையும் பத்திரமாகக் கொண்டு போய் விட்டார்கள். ஜீயரின் திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றார்கள். மகான்கள் மகிமை அளவில் அடங்காது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post நான்கு சிங்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Uttians ,Arulasi ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!