×

அயர்லாந்துடன் இன்று முதல் டி.20 போட்டி; என் திறமையின் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு.! கேப்டன் பும்ரா பேட்டி

டப்ளின்: அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டி.20 போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பும்ரா தலைமையில் இளம்வீரர்கள் கொண்ட இந்திய அணி களம் இறங்குகிறது. முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து 11 மாதம் ஓய்வில் இருந்த பும்ரா அணிக்கு திரும்பிய நிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

துணை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோருடன் ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா அறிமுக வீரர்களாக களம் இறங்க உள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, முகேஷ்குமார், அர்ஷ்தீப்சிங், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் என்று பந்துவீச்சு வலுவாக தென்படுகிறது. மறுபுறம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் பேட்டிங்கில் பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், பந்துவீச்சில் கிரேக் யங், ஜோஷ் லிட்டில், மார்க் அடைர் கவனம் ஈர்க்கலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இதனிடையே இந்திய அணி கேப்டன் பும்ரா நேற்று அளித்த பேட்டி: “நான் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு நீண்ட பாதை. இதில் நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. நான் மீண்டும் விளையாடுவதை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். எனக்கு தற்போது எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

நான் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கவில்லை. தேவையற்ற எதிர்பார்ப்புகளை என் மீது வைத்துக் கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வருகிறேன். என் நேரத்தை நான் அனுபவிக்க விரும்புகிறேன். நான் நிறைய பங்களிக்க வேண்டும், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் என்னிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சனை என்னுடையது அல்ல. நான் பழைய அதே ஆள்தான். என் திறமையின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பி வருகிறேன் என்பதை புரிந்து கொள்கிறேன்’என்றார்.

இதுவரை நேருக்கு நேர்…

இந்தியா-அயர்லாந்து இதுவரை 5 டி.20 போட்டியில் மோதியதில் அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக டப்ளினில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா 225/7 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும்.

மைதானம் எப்படி?

டப்ளின் மலாஹிட்டில் இந்தியா இதற்கு முன் 4 டி.20 போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. அயர்லாந்து இங்கு 10 டி.20 போட்டிகளில ஆடி 2ல் வெற்றி, 8ல் தோல்வி கண்டுள்ளது. இங்கு டி.20 போட்டியில் ஸ்காட்லாந்து 2019ல் 252/3 ரன் குவித்தது தான் அதிகபட்சமாகும். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்ச்சில் 200 ரன்னை எளிதாக குவிக்கலாம். இங்கு இந்தியா ஆடிய 4 போட்டியில் முதலில் பேட் செய்த 3 போட்டியிலும் 200 பிளஸ் ரன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அயர்லாந்துடன் இன்று முதல் டி.20 போட்டி; என் திறமையின் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு.! கேப்டன் பும்ரா பேட்டி appeared first on Dinakaran.

Tags : T20 match ,Ireland ,Bumrah ,Dublin ,T20 ,Dinakaran ,
× RELATED துஷாரா, பும்ரா அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா