×

ரூ.564 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கு: கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: 564 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு வழங்கிய ஜாமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தரம் குறைந்த நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக , கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின்நிறுவனம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாய் அகமது புகாரியின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரியை அமலாக்கத்துறையினர் மார்ச் 4ம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனவும், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன் மனுக்கள் சிறப்பு நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 16ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.564 கோடி பரிமாற்றம் செய்த வழக்கில் ஜாமீன் தந்ததற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அகமது ஏ.ஆர். புகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அமலாக்கத்துறை மனுவுக்கு ஆக.23க்குள் பதில் அளிக்க அகமது ஏ.ஆர்.புகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ரூ.564 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கு: கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Coastal Energy ,iCordt ,Chennai ,High ,Court ,iCort ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு