×

சில மாதங்களில் பணிகள் முடிவடையும் நெல்லையில் ரூ.5 கோடியில் கலைஞர் அறிவு சார் மையம் சட்டப்பேரவை நூலகக் குழு தலைவர் சுதர்சனம் தகவல்

நெல்லை, ஆக. 18: நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம் பணிகள் சில மாதங்களில் முடிக்கப்படும் என சட்டப் பேரவை நூலகக் குழு தலைவர் சுதர்சனம் தெரிவித்தார். நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை நூலகக்குழுத் தலைவர் சுதர்சனம் தலைமையில், நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன், சட்டப் பேரவை நூலகக் குழு உறுப்பினர்கள் மதுரவாயல் கணபதி, முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின் குமார், நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நூலகக்குழு ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், குழு தலைவர் சுதர்சனம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள நூலகங்கள் சட்டப் பேரவை நூலகக் குழுவினரால் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நூலகத்திற்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள், நூலக உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் வேண்டுமென்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அதை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள வஉசி மணி மண்டபத்திலுள்ள நூலகம், அதன் அருகிலுள்ள கலைஞர் அறிவு சார் மையம், மாவட்ட பொது நூலகம், என்ஜிஓ காலனி, கங்கைக்கெண்டான் கிளை நூலகம் உள்ளிட்ட நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவு சார் மையம் சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் தயார் செய்யப்படும்.

மதுரையில் கலைஞர் நூலகத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இந்நூலகம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினர்களுக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 141 மாணவர்கள் பயிற்சி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள மாணவர்கள் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்பயிற்சியில் மாணவர்களின் தேவைகள் குறித்து குழு உறுப்பினர்களால் கேட்டறியப்பட்டது. ஒரு சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை நூலகக் குழு உறுப்பினர்களால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், அப்பாசமுத்திரம் நகராட்சி சார்பில் ரூ.15 லட்சத்து 2 ஆயிரத்து 752ம், விகேபுரம் நகராட்சி சார்பில் ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்து 419ம், களக்காடு நகராட்சி சார்பில் ரூ.13 லட்சத்து ஆயிரத்து 114ம், நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.ஒரு கோடியும், ஊராட்சிகளின் மூலம் ரூ.18 லட்சத்து 77 லட்சமும் என மொத்தம் ரூ.ஒரு கோடியே 46 லட்சத்து 26 ஆயிரத்து 285 சட்டப் பேரவை நூலகக்குழு மூலம் நெல்லை மாவட்ட நூலகத்திற்கு வழங்கப்பட்டது. முன்னதாக, போட்டித் தேர்வு மாணவர்கள் பயில்வதற்காக தமிழ்நாடு பாடநூல் புத்தகங்களை மாவட்ட நூலகங்களுக்கு குழுவினர் வழங்கினர். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சுகன்யா, நூலகத் துறை இணை இயக்குநர் அமுதவள்ளி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராஜ், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நூலகர்கள், நூலகத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வஉசி மணிமண்டபத்தை பார்வையிட்ட குழ தலைவர் சுதர்சனம் ரூ.10 ஆயிரம் வழங்கி நூலக கொடையாளராக சேர்ந்தார்.

The post சில மாதங்களில் பணிகள் முடிவடையும் நெல்லையில் ரூ.5 கோடியில் கலைஞர் அறிவு சார் மையம் சட்டப்பேரவை நூலகக் குழு தலைவர் சுதர்சனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Legislative Assembly Library Committee ,Sudarsanam ,Paddy ,Nellai Municipal Corporation Exhibition Artist Knowledge Center ,Artist Knowledge Center ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே...