×

கலெக்டர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடரும் அமலிநகர் மீனவர்களின் போராட்டம்

திருச்செந்தூர், ஆக. 18: திருச்செந்தூர் அமலிநகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு பாலம் அமைத்திட சட்டப்பேரவையில் கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.
ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படாத நிலையில், தூண்டில் வளைவு பால பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 10ம் நாளான நேற்று முன்தினம் (16ம் தேதி) மதியம் முதல் அமலி அன்னை ஆலயம் முன்பு மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் ஊர் நலக்கமிட்டியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமலிநகருக்கு கலெக்டர் நேரில் வந்து பேச வேண்டுமென வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 11வது நாளாக அமலிநகரில் சாகும்வரை உண்ணாவித போராட்டத்தை மீனவர்கள் தொடர்ந்தனர்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமலிநகர் பகுதியில் தூண்டில் வளைவு பாலம், விரைவில் அமைக்கப்படும். இதை எழுத்து பூர்வமாக மீனவ மக்களிடம் எழுதி கொடுக்க தயாராக உள்ளேன். எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல் எனது தலைமையில் மாவட்ட எஸ்பி, மீன்வளத்துறை அலுவலர்கள் முன்னிலையில் இன்று (ஆக.18) மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமலி மீனவ கிராமத்தில் இருந்த 100 மீனவர்கள் தவறாது பங்கேற்க வருமாறு அழைக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.

The post கலெக்டர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடரும் அமலிநகர் மீனவர்களின் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Amalinagar ,Tiruchendur ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்