×

ரயில்வேயை தனியார் மயமாக்கி தொழிலாளர்களின் வேலையை பறிப்பதை தடுக்க வேண்டும்: எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் பேச்சு

 

மதுரை, ஆக. 18: ரயில்வேயை தனியார்மயமாக்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று எஸ்ஆர்எம்யூ எனப்படும் தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா கூறியுள்ளார். மதுரை ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், மேற்கு நுழைவு வாயிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் ரபீக் தலைமை வகித்தார். உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு பேசும்போது, ‘‘ரயில்வேயில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்கினர்.

இதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. இதனால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி, ஓய்வு பெறும்போது ஊழியர் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தில் 30 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வந்தது. தனியார் மயம் என்ற பெயரால் பயணியர் மற்றும் சரக்கு ரயில்கள் மட்டுமின்றி ரயிவ்வே நிலையங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கத் ஒன்றிய அரசை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கி, லட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களின் வேலையை பறிக்க இருப்பதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரயில்வேயை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

The post ரயில்வேயை தனியார் மயமாக்கி தொழிலாளர்களின் வேலையை பறிப்பதை தடுக்க வேண்டும்: எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : SRMU ,General Secretary ,Madurai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...