×

கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையின் மேற்கூரை சேதம்

 

ஊட்டி, ஆக. 18: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரம், செடி, ெகாடி மற்றும் பல வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு வகையான பெரணி செடிகள், கள்ளிச் செடிகளும் சேகரிக்கப்பட்டு இங்கு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், பெரணி செடிகள் மற்றும் மலர் செடிகள் கீழ் கார்டன் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில், பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை பழைமை வாய்ந்தது. எனினும் மேற்கூரை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கண்ணாடிகள் சேதம் அடையாமல் உள்ளது. அதேபோல் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. மேலும் மேல் கார்டன் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான வகைகளை கொண்ட கள்ளிச் செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், இந்த கண்ணாடி மாளிகை மிகவும் பழைமை வாய்ந்தது என்பதால் மேற்கூரை பழுதடைந்துள்ளது. மேற்கூரை முழுக்க முழுக்க கண்ணாடியால் உள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரேனும் செல்லும் போது கண்ணாடிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் தற்போது தற்காலிகமாக கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையின் மேற்கூரை சீரமைக்கப்பட்ட பின் சுற்றுலா பயணிகள் கள்ளிச் செடிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையின் மேற்கூரை சேதம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Botanical Garden ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...