×

பட்நவிஸ் நிலைதான் மோடிக்கும் ஏற்படும் சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது பாஜ: சரத்பவார் கடும் தாக்கு

மும்பை: ஒன்றிய அரசு சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வருகிறது. ஸ்திரமான அரசு என்று தங்களைக் கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சி மாநிலங்களில் ஆட்சியை உருக்குலைக்கின்றனர் என, சரத்பவார் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பீட் மாவட்டத்தில் நடந்த பேரணியில் சரத்பவார் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் சென்று, அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். வடகிழக்கு மாநில மக்களின் வலியை உணர வேண்டும். கடந்த மே மாதத்தில் இருந்த அந்த மாநிலத்தில் கலவரங்கள் நடந்து வருகின்றன. ஒன்றிய பாஜ அரசு சமுதாயத்தை, மக்களை சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தி துண்டாடுகிறது. ஸ்திரமான அரசு என்று தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆனால், மாநிலத்தில் உள்ள ஆட்சியை சீர்குலைத்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘‘நான் மீண்டும் வெற்றி பெற்று வருவேன்’’ என கூறியுள்ளார். அவர், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் வழியைப் பின்பற்றி, அவரைப் போல் கூறியுள்ளார்.
காரணம், கடந்த 2019ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, ‘நான் மீண்டும் முதல்வராக வருவேன்’ என்று பட்நவிஸ் கூறினார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது? அவரால் வர முடிந்ததா? எனவே, பிரதமர் என்னவாக திரும்பி வரப்போகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஏற்கெனவே இருந்ததை விட குறைவான பதவியில்தான் பட்நவிஸ் இப்போது இருக்கிறார். உரத்தின் விலை உயர்ந்து விட்டது. ஆனால் ஒன்றிய அரசு விவசாயிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இவ்வாறு சரத்பவார் பேசினார்.

The post பட்நவிஸ் நிலைதான் மோடிக்கும் ஏற்படும் சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது பாஜ: சரத்பவார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Budnavis ,Modi ,Baja ,Sarathbavar ,Mumbai ,Union Government ,Modhi ,Saratbwar ,Dinakaran ,
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...