×

பிரதமர் மோடி கூறியதுபோல் பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும்: ரெப்கோ வங்கி விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் உறுதி

சென்னை: பிரதமர் மோடி கூறியதுபோல் பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும் என்று ரெப்கோ வங்கி விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா கூறியுள்ளார். சென்னை திநகர் உஸ்மான் சாலையில் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனம் இணைந்து, பெண் குழந்தைகளுக்கான ‘ரெப்கோ தங்கமகள் சிறப்பு டெபாசிட் திட்டம் மற்றும் ரெப்கோ விருக்‌ஷா’ மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சிறப்பு கடன் திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழா ஆலந்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவிற்கு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா தலைமை வகித்தார். வங்கியின் பொதுச் செயலாளர் ஓ.எம்.கோகுல் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா கலந்துகொண்டு தங்கமகள் சிறப்பு டெபாசிட் திட்டம், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கான சிறப்ப கடன் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.5 கோடிக்கான கடன் உதவி வழங்கினார். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய குடும்பங்களில் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகள், கேடயம், உயர்கல்விக்கான உதவித்தொகை போன்ற ஆணைகளையும் வழங்கினார். மேலும் வங்கியின் அறக்கட்டளை மூலமாக தாயகம் திரும்பிய விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர், வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘ரெப்கோ டிஜி பே’ என்ற திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள கூட்டுறவு கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றாக ரெப்கோ வங்கி சிறந்து விளங்கி வருகிறது. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, விரைவில் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா 3வது இடத்துக்கு வந்தடையும் என்றார். அவர் கூறியது நிச்சயம் நிறைவேறும். இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வங்கிகள்தான் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளும் மிகவும் நன்றாக உள்ளது என்றார்.

The post பிரதமர் மோடி கூறியதுபோல் பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறும்: ரெப்கோ வங்கி விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Union Minister of State ,REBCO Bank ,Chennai ,Modi ,Union Minister ,Repco Bank ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...