விருதுநகர்: சீன செயலி மூலம் மிகப்பெரும் சைபர் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர் விருதுநகர் ஆவியூரில கைதானார். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் அம்பலமாகியுள்ளன. விருதுநகர் மாவட்டம், ஆவியூரை சேர்ந்தவர் சித்ரவேல் (32). எம்பிஏ பட்டதாரி. பெங்களூரூவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். திருமணமானவர். சீன செயலி மூலம் மிகப்பெரிய சைபர் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக இவரை ஒடிசா போலீசார் தேடிவந்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான சித்ரவேல், தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஒடிசா தனிப்படையினர் விருதுநகர் வந்தனர். இங்கு விருதுநகர் மாவட்ட போலீசாருடன் இணைந்து, மப்டி உடையில் பதுங்கி இருந்து ஆவியூரில் வைத்து சித்ரவேலை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் கைது செய்து, ஓடிசா அழைத்துச் சென்றனர். ஆக. 16ம் தேதி கட்டாக்கில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சித்ரவேல் மோசடி குறித்து ஒடிசா போலீசார் கூறி இருப்பதாவது: சீன செயலி மூலம் சைபர் நிதி மோசடி நடந்துள்ளது. இதற்கு மூளையாக சீனாவை சேர்ந்த குவான்ஹுவா வாங் (40) செயல்பட்டுள்ளார். இவரது நிறுவனத்தில் இயக்குநராக சித்ரவேல் இருந்துள்ளார். இவர், சீனர்களின் சட்டவிரோத டிஜிட்டல் கடன் பயன்பாடுகளை இயக்கி, பலரையும் பெரும் கடன்களில் சிக்க வைத்துள்ளார். இதில் சிலர் தற்கொலை செய்தனர். கடனில் பாதித்த மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்தும் மிரட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சீன கடன் செயலி தடை செய்யப்பட்டது. இதன் பிறகு மோசடி முதலீடு ஆப் மூலமும் சித்ரவேல் பலலை ஏமாற்றி உள்ளார். சித்ரவேல் குறித்து தகவல் தெரிந்ததும், தமிழ்நாடு போலீசார் உதவியுடன், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post சீன செயலி மூலம் நிதி மோசடி விருதுநகரை சேர்ந்தவர் கைது: விசாரணையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.
