×

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கணக்கு காட்டப்பட்டதா? சுகாதார அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகள் தவறானவை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்ததாக மத்திய தலைமை கணக்குத்தணிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே செல்போன் எண்ணில் 7.50 லட்சம் பயனாளிகளை சேர்த்தது, இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதுபற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்து உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனாளிகளின் தகுதியை தீர்மானிப்பதில் மொபைல் எண்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆதார் அடிப்படையில் தான் பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே பயனாளி ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது கண்டறியப்பட்டதாக வெளியான ஊடக அறிக்கைகள் முற்றிலும் தவறானவை. இந்த திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று நாட்கள் வரை முன் அங்கீகாரத்திற்கான கோரிக்கைகளைத் தொடங்க மருத்துவமனைகள் அனுமதிக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களின் முன் அங்கீகாரம் கோரிக்கை வைக்கப்படும் முன்பே அவர்கள் இறந்தனர். இதுபோன்ற சமயங்களில், இறப்பு தேதியும், அனுமதிக்கப்பட்ட தேதி அல்லது அதற்கு முந்தைய தேதியும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், முன் அங்கீகார கோரிக்கையை எழுப்பிய அதே மருத்துவமனையால் இறப்பும் பதிவாகியுள்ளது. இவை 50 சதவீதத்திற்கும் அதிகமான பொது மருத்துவமனைகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனை கணக்கில் பணம் திருப்பிச் செலுத்தப்படுவதால் மோசடி நடந்ததாக கருத வேண்டியது இல்லை.

மேலும் தாய் மற்றும் குழந்தை ஒரு ஆயுஷ்மான் கார்டைப் பயன்படுத்தி மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் சிகிச்சையின் போது குழந்தை இறந்தால், மருத்துவமனை குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கிறது. இது தாயின் அட்டையில் தவறாக பதிவு செய்யப்படுகிறது. தாய் அடுத்த சிகிச்சைக்காக வரும்போது, ​​அவரது ஆயுஷ்மான் கார்டு ‘இறந்ததாக’ குறிக்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு சேவை மறுக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் தாய் இறந்ததாக பதிவான விவரம் மாற்றப்படும். இருப்பினும் தவறு நடந்து இருந்தால் இதை செய்த மருத்துவமனையின் மீது தண்டனை நடவடிக்கைகள் தொடங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கணக்கு காட்டப்பட்டதா? சுகாதார அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ministry of Health ,New Delhi ,health ministry ,Ayushman ,Dinakaran ,
× RELATED அதிகரித்து வரும் சுவாச...