×

கொடநாடு கொலை, கொள்ளையில் புதிய தகவல்களை வெளியிடுவேன்: ஜெ. கார் டிரைவரின் அண்ணன் ‘திடுக்’

கொடநாடு கொலை, கொள்ளையில் புதிய தகவல்களை வெளியிடுவேன்: ஜெ. கார் டிரைவரின் அண்ணன் ‘திடுக்’

சேலம்: ‘கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து புதிய தகவல்களை வெளியிடுவேன்’ என ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவரை ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் போலீசார் தேடி வந்த நிலையில் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், கனகராஜின் செல்போனில் இருந்த ஆவணங்கள், அவர் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என தகவலை அழிக்கும் நோக்கில் அந்த செல்போனை உடைத்து கனகராஜின் அண்ணன் தனபால் தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனபாலை கொடநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த மாதம் நிலம் வாங்கி கொடுத்ததில் புரோக்கராக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டதாக மேச்சேரி போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது கோவைக்கு சென்று ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி டீனிடம் பேசி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, பத்திரிகையாளர்கள் அங்கு கூடி, அவரை வீடியோ எடுத்தனர். அந்த சமயத்தில், ‘முதல்வர் எனது மகள்களை காப்பாற்ற வேண்டும், கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய பல புதிய தகவல்களை நான் தெரிவிக்க இருக்கிறேன்’ என்று கூறினார். இதனால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடநாடு கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளையில் புதிய தகவல்களை வெளியிடுவேன்: ஜெ. கார் டிரைவரின் அண்ணன் ‘திடுக்’ appeared first on Dinakaran.

Tags : Kodanad ,J. ,Tiduk ,J. Car ,Thiduk' Salem ,Kodanadu ,Thiduk ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...