×

61வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு வாழ்த்து: தமிழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை: திருமாவளவன் 61வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது 61வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விசிகவினர் சார்பில் ஏழை, எளிய மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் கட்சியினர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் விசிக எம்எல்ஏக்கள் ம.சிந்தனை செல்வன்(காட்டுமன்னார்கோவில்), எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர்), ஆளூர் ஷா நவாஸ்(நாகப்பட்டினம்), பனையூர் பாபு(செய்யூர்) ஆகியோர் திருமாவளவனை வாழ்த்தி முதல் கட்ட தேர்தல் நிதியை வழங்கினர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளை தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி: சனாதனத்திற்கு எதிரான சமூகநீதிப் போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சக நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்: சாதிய-மதவாத-சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும்-நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி INDIAவை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் – செயல்பாடுகளும் வெல்லட்டும்! மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்: பிறந்தநாள் காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவனுக்கு இனிய நல்வாழ்த்துகள். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post 61வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு வாழ்த்து: தமிழகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin Thirumavalavan ,Tamil Nadu ,Chennai ,M. K. Stalin ,Thirumavalavan ,
× RELATED முதல்வரின் சட்டமன்ற அலுவலகத்தில்...