×

நீட் திணிப்பு, ஒன்றிய அரசு, ஆளுநரை கண்டித்து 20ம் தேதி உண்ணாவிரத அறப்போர்: மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

 

திருவள்ளூர்: நீட் தேர்வு திணிப்பு ஒன்றிய பாஜ அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுகவினர் வரும் 20ம் தேதி உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது. இதில் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்க வில்லை.

ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்து வருகிறார். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ‘நீட்’ தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், வருகின்ற 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திருவள்ளூர் மருத்துவ கல்லூரி வளாகம் எதிரி உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத அறப்போரில், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி உள்பட மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும், பெருந்திரளாக பங்கேற்கவேண்டும் என்று ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post நீட் திணிப்பு, ஒன்றிய அரசு, ஆளுநரை கண்டித்து 20ம் தேதி உண்ணாவிரத அறப்போர்: மாவட்ட செயலாளர்கள் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : NEET ,union ,Tiruvallur ,DMK ,Union BJP government ,Governor of ,Tamil ,Nadu ,
× RELATED ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் 41 நாளில் 50 லட்சத்தை தாண்டியது