×

மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு எடப்பாடிக்கு எதிராக தொடரும் போஸ்டர் யுத்தம்: செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம், தென்மாவட்டங்களில் திடீர் பதற்றம்

சென்னை: மதுரை மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தனது செல்வாக்கை காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் நாளை மறுதினம் (ஞாயிறு) நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து பிரச்னை ஏற்படாத வகையில் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கையின்போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதுபற்றி நீதிமன்றம் விசாரணை நடத்தி, விரைவில் தீர்ப்பு வழங்கும் என்பதால் அதிமுக மாநாட்டுக்கு தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சூழலில், கடந்த ஒரு வாரமாகவே மதுரை, ராமநாதபுரம், நெல்லை, சிவகங்கை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் ‘எடப்பாடியே மதுரை மண்ணிற்குள் நுழையாதே…’ என்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது, அதிமுகவினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒருவித பதற்றத்தை அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் முழுவதும் பசும்பொன் தேசிய கழகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘கடந்த தேர்தலில் சாதிய வன்மத்துடன் 10.5% உள் இடஒதுக்கீடு மூலம் நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமி மற்றும் இனத்துரோகியை புறக்கணிப்போம்.மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா உங்கள் துரோகத்தை, புறக்கணிப்போம் எடப்பாடியை, புரிந்து கொள்வோம் அரசியல் துரோகத்தை’ என அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி மதுரைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள செல்லூர் ராஜூ வீட்டின் எதிரே சீர்மரபினர் நலச்சங்கத்தினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநாடு ஏற்பாடுகளை செய்து வரும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் ராஜூவை கண்டித்தும், எடப்பாடி பழனிச்சாமி 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சீர்மரபினருக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியும், கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து சீர்மரபினர் நலச்சங்கத்தினர், செல்லூர் ராஜூ வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செல்லூர் போலீசார், சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

இதேபோல், பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ‘‘தேவர் சமுதாய முக்களே உஷார்…! ஜாதிய வன்மத்துடன் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைத்த எடப்பாடியை புறக்கணிப்போம். மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா மட்டமான துரோகத்தை… புறக்கணிப்போம் எடப்பாடியை… புரிந்து கொள்வோம் அரசியல் சதியை… மதுரை மண்ணிற்குள் நுழையாதே…’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருவதால் வருகிற 20ம் தேதி அதிமுக மாநாடு சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. போலீசாரும், பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதால் தென்மாவட்டங்களில் ஒருவித பதற்றம் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.

The post மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு எடப்பாடிக்கு எதிராக தொடரும் போஸ்டர் யுத்தம்: செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம், தென்மாவட்டங்களில் திடீர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Madurai conference ,Raju ,Chellore ,Chennai ,Edabadi Palanisami ,Madurai ,Sellore ,Dinakaran ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…