×

ஆலை விரிவாக்க பணிக்கு ரூ.2.30 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே ஆலை விரிவாக்க பணிக்கு ரூ.2.30 லட்சம் லஞ்சம் பெற்ற அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் தனது ஆலை விரிவாக்க பணிக்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த பணிக்கு அனுமதி கொடுக்க அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் (எ) லோகநாதன் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.2.30 லட்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராதாகிருஷ்ணன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.2.30 லட்சத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஆனந்த் (எ) லோகநாதனிடம் ராதாகிருஷ்ணன் கொடுத்தார். அந்த பணத்தை ஆனந்த் (எ) லோகநாதன் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் கெளசல்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆனந்த் (எ) லோகநாதனை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து மன்ற அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

The post ஆலை விரிவாக்க பணிக்கு ரூ.2.30 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK panchayat ,Tirupur ,Uthikuli ,AIADMK ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்