×

ஏ-கிரேட் மின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரூ3 ஆயிரம் லஞ்சம்; மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சென்னை: சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் மின்வாரியத்தில் சிறுசிறு ஒப்பந்த பணிகள் பெற்று வேலை செய்து வருகிறார். இதற்கிடையே தனது ஏ-கிரேட் மின்வாரிய ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை கிண்டி திருவிக தொழில்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய லைசன்ஸ் போர்ட் அலுவலகத்தை கொடுத்திருந்தார். கடந்த 10ம் தேதி தனது ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து மின்வாரிய செயலாளரை சந்தித்துள்ளார். அப்போது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அதை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார். பிறகு மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதரை சந்தித்த போது, அவர் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தை கொடுக்க ரூ10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

பிறகு மீண்டும் கடந்த 14ம் தேதி மின்வாரிய ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார் கண்காணிப்பாளர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து பேசி ரூ10 ஆயிரத்தில் இருந்து ரூ3 ஆயிரமாக குறைத்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மீது புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைபடி, ரசாயனம் தடவிய ரூ3 ஆயிரத்தை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் மின்வாரிய ஒப்பந்ததாரர் கிருஷ்ணகுமார் லஞ்ச பணம் ரூ3 ஆயிரம் கொடுக்கும்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ3 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அரசு அதிகாரிகள் தனது கடமையை தவறி லஞ்சம்பெற்றதால், மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏ-கிரேட் மின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரூ3 ஆயிரம் லஞ்சம்; மின்வாரிய கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sridhar ,Chennai ,Krishnakumar ,Senggunram ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...