×

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க அதிகாரம் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு மட்டுமல்ல அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ெஜனரல் ஆர்.சண்முகசுந்தரம், இந்த விளையாட்டால் பல தற்கொலைகள் நடந்ததை தொடர்ந்தே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களுக்கு அநீதி இழைக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் செயல்படுவதால் அவற்றை கண்காணிக்க முடியாது. இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்த இயலாது என்பதால் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ரம்மியை திறமைக்கான விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டம், ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது என்று கேட்டார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், நேரடியாக விளையாடும் போது தான் ரம்மி, திறமைக்கான விளையாட்டு என்று பதிலளித்தார். இதைத்தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆன்லைனில் ரம்மியை விளையாடினால், அது அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக மாறி விடும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆன்லைனில் ரம்மி விளையாட எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஆன்லைன் விளையாட்டு நிறுவன தரப்பு மூத்த வழக்கறிஞர், ஆன்லைனில் ரம்மி விளையாட பந்தயமாக செலுத்தப்படும் மொத்த தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை வெற்றி பெற்றவரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்றார். இதையடுத்து மற்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு பதில் வாதங்களுக்காக விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க அதிகாரம் உள்ளது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,iCourt ,Chennai ,eCourt ,Tamilnadu government ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...