×

எய்ம்ஸ் அரசியல்

 

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர்தர மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய பாஜ அரசு முதன்முதலாக பதவியேற்ற ஓராண்டில் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் உள்பட பல இடங்கள் பேசப்பட்டு இறுதியில் மதுரையில் அமைப்பதுதான் சரியானது என்று பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து மதுரை மாநகரத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் மதுரையில் தொடங்காததை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தனர். அப்படி விமர்சனம் எழும்போது அந்தந்த நேரத்துக்கு தகுந்த பொய்யை ஒன்றிய பாஜ தலைவர்களும், தமிழக பாஜ தலைவர்களும் அவிழ்த்துவிட்டனர்.

வேலைகளே தொடங்காத எய்ம்ஸ் மருத்துவமனைகள் வந்துவிட்டதாக பிரதமர் மோடியே கூசாமல் பொய் கூறியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதுரையில் மட்டுமல்ல, பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அப்படியே காலி நிலமாகவே கிடக்கிறது. இதற்கு பின்னணியிலும் பாஜவின் அரசியல் சூழ்ச்சி அமைந்துள்ளது. தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துவிட்டதாகவே உருவகப்படுத்திய மோடிக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ‘பிரதமரிடம் இருந்து நாடு உண்மையை எதிர்பார்க்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் பிறகு பீகார் மாநில அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வழங்கிய நிலம் ஏற்றதாக இல்லை என்று ஒன்றிய அரசு கடிதம் எழுதி தாமதத்துக்கு காரணம் பீகார் மாநில அரசுதான் என்று குற்றம்சாட்டியது.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பாஜவுடன் கூட்டணியில் இருந்த போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி பெறப்பட்டது. தற்போது அவர் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தால் ஏற்படும் நற்பெயர் அவருக்கு சென்றுவிடும் என்று ஒன்றிய பாஜ அரசு தாமதப்படுத்தி அரசியல் செய்கிறது. தர்பங்கா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 151 ஏக்கர் நிலத்தை பீகார் மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த நிலம் தாழ்வாக இருப்பதாக ஒன்றிய அரசு நொண்டி சாக்கு கூறியதால், பீகார் மாநில அரசே முன்வந்து அந்த நிலத்தை மேடாக்கும் பணிகளை மேற்கொண்டு அதற்கான செலவினங்களையும் ஏற்றுக்கொண்டது.

எனவே, ஒன்றிய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்தெந்த மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறதோ அந்த மாநிலங்களில் ஒன்றிய அரசு திட்டப்பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வருகிறது. இதுகுறித்து மாநில அரசு கேள்வி கேட்டால் நேரத்துக்கு தகுந்தாற்போன்று பொய்களை அவிழ்த்துவிடுவதை ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

The post எய்ம்ஸ் அரசியல் appeared first on Dinakaran.

Tags : AIIMS Politics ,Union Baja government ,AIIMS Hospital ,AIIMS ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...