×

முகூர்த்தம், விசேஷ நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல்

* போக்குவரத்து துறை தகவல்

சென்னை: ‘வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’ என தமிழ்நாடு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு, ஆகஸ்ட் 18, 19ம் தேதிகளில், சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகத்தில் பஸ்சில் பயணம் செய்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள ஆக.18ம் தேதி 14,576 பயணிகளும், 19ம் தேதி 9,844 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும், நாளை 350 பேருந்துகளும், மேலும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,250 பஸ்கள் இயக்கப்படும். இதுமட்டுமின்றி, ஞாயிற்று கிழமைகளில் சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக 14,227 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50சதவீத கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி இத்திட்டத்தின் மூலம் கடந்த மே.8ம் தேதி முதல் ஆக.15ம் தேதிவரை 1,682 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது மேற்கூறிய சலுகையை பெற பயணிகள் முன்பதிவு செய்திருக்க வேண்டும். வருகின்ற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் வளர்பிறை முகூர்த்தமாக இருப்பதால் பயணிகள் சுபநிகழ்சியில் கலந்து கொள்ள வசதியாக முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post முகூர்த்தம், விசேஷ நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Mukurtam ,Chennai ,Mugurtha ,Government Transport Corporations ,
× RELATED முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று...