×

சென்னை இராயபுரத்தில் தெற்கு கூவம் சாலையில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியினை பார்வையிட்டார் ராதாகிருஷ்ணன்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட தெற்கு கூவம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட தெற்கு கூவம் சாலையில் நேற்று இரவு முதல் தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் தீவிரத் தூய்மைப் பணிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்று கைவிடப்பட்ட வாகனங்கள் ஆகியவை அகற்றப்பட்டு, அவ்விடத்தில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகைப் மருந்து அடித்தல் போன்ற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தீவிரத் தூய்மைப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடி, தங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும், குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அங்குள்ள கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கழிப்பிடங்களை கட்ட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது; சென்னை மாநகரம் மிகப்பெரிய மாநகரமாகவும், உலகத்தரம் வாய்ந்த சிறப்புமிக்க இடங்களைக் கொண்டதாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களும் இங்கு உள்ளது. இந்தப்பகுதியில் தூய்மைப்பணி மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல் (Call for Action) என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள், நீர்நிலைகளின் ஓரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல், கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

டி.என்.இ.பி. லிங்க் சாலை, தெற்கு கூவம் சாலை போன்ற இடங்களில் கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைகள், நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் குப்பைகள், கைவிடப்பட்ட வாகனங்கள் போன்ற 150 டன் குப்பைக் கழிவுகள் காணப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 6000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும், இன்று ஆணையாளர் முதல் பணியாளர்கள் வரை உள்ள அனைவரும் களத்தில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இவ்விடங்களில் காணப்படும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் போது நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கட்டாயம் கையுறைகள் அணிந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் உள்ள கழிப்பிடம் சரிவர பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால், புதியக் கழிப்பிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேற்று இரவு இந்தப் பகுதிகளில் உள்ள குப்பைகளானது லாரிகள் மூலமாக 51 நடைகளில் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று 50 நடைகளில் குப்பைகள் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல் என்ற இந்தத் திட்டத்தில் மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் இணைந்து ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் கார் பாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை கூவத்தில் போட்டு விடுகின்றனர். கூவத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயத்தில் ஏதாவது பகுதிகளில் சிக்கி அந்தப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். இதை மக்கள் உணர்ந்து குப்பைகள் மற்றும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதைத் தவிர்த்திட வேண்டும்.

இந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அவர்களுக்கு தகுந்த நேரத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை விடுபடாமல் போட வேண்டும். பொதுசுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இன்றுடன் இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தூய்மையாக மாற்றப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக குப்பை தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் இந்தத் தீவிரத் தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலை மற்றும் தெருவோரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குப்பைக் கொட்டும் வளாகங்களில் வைக்கப்படும்.

இந்தப் பயன்பாடற்ற கார்களில் மழைநீர் தேங்கும் போது டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. ஆரம்ப நிலையிலேயே கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பயன்பாடற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். பொதுமக்களும் இந்தப் பணிகளில் இணைந்து செயல்பட்டு மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் சிவ ராஜசேகரன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post சென்னை இராயபுரத்தில் தெற்கு கூவம் சாலையில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியினை பார்வையிட்டார் ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,South Koovam Road ,Chennai Rayapuram ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Rayapuram Zone ,Ward- ,Dinakaran ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...