×

மாங்குரோவ் காடுகளைக் காப்போம்!

2004ம் ஆண்டில் உலகையே உலுக்கிய வார்த்தை சுனாமி. காலை நேரத்தில் கடற்கரையில் நடந்து சென்ற பலர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஆழிப்பேரலையில் சிக்கி தவித்தனர். லட்சக்கணக்கில் உயிர்கள் காவு வாங்கப்பட்டன. வீடுகள் பெயர்க்கப்பட்டு பலர் வீதிக்கு வந்தனர். தெற்காசிய நாடுகள் முழுவதும் இந்த காட்சிகள் அரங்கேறின. இதில் சில இடங்களில் மட்டும் சுனாமியின் ஆட்டம் சுணக்கம் கண்டது. மாங்குரோவ் எனப்படும் புன்னை
வனக்காடுகள் நிரம்பிய கழிமுகப்பகுதிகள் அந்த சில இடங்கள். இந்த சமயத்தில்தான் மாங்குரோவ் காடுகளின் மகத்துவத்தை பலர் உணர்ந்தார்கள். ஆனாலும் இன்று மாங்குரோவ் காடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே தொடர்கிறது. எதற்காக இந்த மரங்கள் இங்கிருக்கின்றன என தெரியாமலேயே சிலர் மாங்குரோவ் காடுகளைக் கடந்து செல்கிறார்கள். இந்நிலையில் மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ம் தேதி மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி அமைந்துள்ள கழுவெளி பகுதி மிகச்சிறந்த சதுப்பு நிலமாக விளங்குகிறது. இதை பழைய மாங்குரோவ் காடுகள் எனவும் அழைக்கிறார்கள். இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு பறவை இனங்கள் வந்து வசிக்கின்றன. இதனால் இதை தமிழக அரசு பறவைகள் சரணாலயாகவே அறிவித்திருக்கிறது. மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி இங்கு விழுப்புரம் மாவட்ட வனத்துறை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை வரவழைத்து சதுப்பு நில தாவரங்களை நட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். அப்போது மாங்குரோவ் காடுகளின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளை நாம் பல்வேறு தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். பரந்து விரிந்த சதுப்பு நிலக்காடுகளுக்கு இடையே படகில் சென்று ரசிக்கும் வகையில் இந்தக் காடு அமைந்திருக்கும். இந்தக் காட்டை மேம்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குரோவ் பாதுகாப்பு தினத்தையொட்டி பழங்குடி மாணவர்களை வைத்து இங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் புன்னை வனக்காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணியாக சென்று அலையாத்தி மரங்களை நட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். இதுபோல பல்வேறு பகுதிகளில் இந்த விழா நடந்திருக்கிறது.

The post மாங்குரோவ் காடுகளைக் காப்போம்! appeared first on Dinakaran.

Tags : mangurov forest ,Mangurov ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!