×

லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தில் தரிசு நில தொகுப்பில் எலுமிச்சை சாகுபடி: வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

லால்குடி, ஆக.17: லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தரிசு நிலதொகுப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எலுமிச்சை கன்றுகளை வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் நெய்க்குப்பை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 24 விவசாயிகளின் தரிசு நிலங்களை ஒருங்கிணைத்து 25 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி தொகுப்பு உருவாக்கப்பட்டது.

இத்தொகுப்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றில் இரண்டு மின் மோட்டார்கள் நிறுவப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் மூலம் எலுமிச்சை கன்றுகள் ஏக்கருக்கு 115 கன்றுகள் வீதம் முழு மானியத்தில் 2,920 எலுமிச்சை கன்றுகள் 24 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இத்தொகுப்பில் நடப்பட்டுள்ளது. மேலும் நடப்பட்ட கன்றுகளுக்கு ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டு எலுமிச்சை கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெய்குப்பை தரிசு நிலதொகுப்பை ஆய்வு செய்த திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் பார்வையிட்டு தொகுப்பு பயனாளிகளிடம் கன்றுகளுக்கு இடையே இடை உழவு செய்து களை கட்டுப்பாடு செய்ய கேட்டுக்கொண்டார்.

எலுமிச்சை கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியிலிருந்து கூடுதல் பயிர் சாகுபடி செய்வதற்கு செய்வதற்கு ஏற்ற உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து அவற்றின் மகசூல் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம் எனவும், இப்பயறுவகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் அவற்றின் வேர் முடிச்சில் தழைச்சத்து உரம் நிலை நிறுத்தப்பட்டு மண் வளத்தை மேம்படுத்தலாம் என தெரிவித்தார். ஆய்வின்போது தரிசு நில தொகுப்பு விவசாயிகளுக்கு சான்று பெற்ற வம்பன்-10 ரக உளுந்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டது.

The post லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தில் தரிசு நில தொகுப்பில் எலுமிச்சை சாகுபடி: வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Barren ,Neikuppai Village ,Lalgudi ,Neiguppai ,Neiguppai village ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...