இளையான்குடி, ஆக.17: இளையான்குடி பகுதி முற்றிலும் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். பயிர் தொழில் முக்கியமானதாக உள்ள இந்த பகுதியில், இளைஞர்களின் வாழ்க்கை திறன் மேம்பட போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கு பொது மைதானம் இல்லை. போலீஸ், ராணுவம் ஆகிய பாதுகாப்பு துறைகளில் சேர்வதற்கு உரிய உடற்தகுதி மற்றும் விருப்பம் இருந்தாலும் பயிற்சி செய்வதற்கு மைதானமும், பயிற்சி கொடுப்பதற்கு பயிற்சியாளரோ இல்லை. அதனால் தகுதியும், திறமையும் இருந்தும் ஆண்டிற்கு 2ஆயிரம் இளைஞர்கள் மாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவயது முதல் ராணுவம், கப்பல்துறை, விமானத்துறை ஆகிய பாதுகாப்புத் துறைகளில் எப்படியாவது பணியாற்ற வேண்டும் என்ற கனவு, லட்சியத்துடன் வலம் வரும் இளையான்குடி பகுதி இளைஞர்கள், மைதானம் இல்லாததால், திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய அயல்நாடுகளுக்கு தொழிலாளர்களாக சென்று வருகின்றனர்.
மேலும் இளையான்குடியில் தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளே உள்ளது. விளையாடுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் உரிய அனுமதியில்லை. மேலும் விளையாட்டு மற்றும் பயிற்சி கொடுப்பதற்கு விளையாட்டு அலுவலர் இல்லாததால் இன்றைய இளைஞர்கள் செல்போனில் மூழ்கிப் போயுள்ளனர். அதனால் இளைஞர்களின் மனதில் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இளைஞர்களின் திறன் மேம்படவும் ராணுவம் மற்றும் போலீஸ் பணிகளில் சேர்வதற்கு, இளையான்குடியில் பொது விளையாட்டு மைதானம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளையான்குடி பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராணுவம், போலீஸ் பணியில் சேர இளையான்குடியில் மைதானம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
