
சென்னை, ஆக.17: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை குறித்து மாநகராட்சி மற்றும் தொடர்புடைய சேவை துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி மற்றும் தொடர்புடைய சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மழையினால் ஏற்பட்ட பழைய அனுபவங்களின் அடிப்படையில் அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால்வாய் இணைப்பு பணிகளையும் முடித்திட வேண்டும். தற்பொழுது பெய்து வரும் மழையினால் மழைநீர் தேங்கும் இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளம் மேடுகளை சரிசெய்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் மற்றும் சென்னை மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத் துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மக்களுக்கு எந்தவித இடர்பாடும், விபத்தும் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை கட்டிடக்கழிவுகள் முதலானவற்றை உரிய துறைகளோடு ஒருங்கிணைந்து அகற்றிட வேண்டும். மழைக்காலத்தில் ஆறுகள் கடலினை அடைந்திடும் முகத்துவாரத்தில் ஏற்படும் மண்மேடுகளை விழிப்புடன் பணியாற்றி அகற்றிட வேண்டும்.
மழைக் காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கான நிவாரன முகாம்களை கண்டறிந்து அவற்றினை தயார் நிலையில் வைத்திட வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகள், மழைநீர் தேங்குமிடங்களில் நீரினை வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் தொட்டிகளில் உள்ள வண்டல்களை தொடர்ந்து தூர்வாரிட வேண்டும். அனைத்து அலுவலர்களும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், ஆர்.லலிதா, இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சமே சிங் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு மையங்களில் எப்பொழுதும் பணிபுரிகின்ற வகையில் சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறை மூலம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கான வசதிகளை தயார் நிலையில் வைத்திடவும், மருந்துகள் இருப்பை உறுதி செய்திடவும் வேண்டும்.
The post வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு இடையூறின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.