×

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் திட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு, ஆக. 17: செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திட்ட வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு முதல்நிலை நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ₹15 லட்சம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ₹15 லட்சம் மதிப்பீடுகளில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் மற்றும் அம்பேத்கர் சிலை அருகில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது, அவ்விடத்தில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு இடையூராக இருந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலெக்டர் ராகுல்நாத் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு நகராட்சி எல்லைக்குட்பட்ட குண்டூர் ஏரியினை அம்புருத் 2.0 திட்டத்தின் கீழ் ₹2கோடியே 94 லட்ச மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு அருகில் உள்ள ஆக்கிரமைப்புகளை அகற்றி, நடைபாதை பகுதியில் கம்பி வேலி அமைக்குமாறும் கலெக்டர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். இங்குள்ள, நடைபாதை சுற்றிலும் மரங்கள் நடுமாறும், மேலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் 31.8.2023க்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுருத்தினார். மேலும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கல்வி நிதியின் கீழ் ₹25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மைய சமையல் கட்டிடத்தினை 25.8.2023 அன்று திறக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

மேலும், இந்த கட்டடத்தின் அருகாமையில் பயன்பாட்டில் இல்லாத பழைய மாதாகோயில் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு இடித்து அப்புறப்படுத்த உத்திரவிட்டார். பாசித்தெரு மேல் நீர்தேக்க தொட்டி அருகாமையில் உள்ள பம்ப் ஆப்ரேட்டர் கட்டிடத்தினை புதிப்பிக்குமாறும் அறியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு நகராட்சி மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையர் இளம்பருதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீ, வட்டாட்சியர் தனலட்சுமி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் திட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Rahulnath ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது