×

மனித, விலங்குகள் மோதலை தடுக்க தீவிர நடவடிக்கை

தர்மபுரி, ஆக.16: தர்மபுரி மாவட்டத்தில் மனித, விலங்குகள் மோதலை தடுக்க, வனத்துறை சார்பில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக யானைகள் அதிகம் வரும் 6 கிராமங்களில், 150 டார்ச் லைட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி வனக்கோட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக உள்ளன. கடந்த மே மாதம் நடந்த கணக்கெடுப்பில் 144 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், யானைகள் காப்புக்காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து, அவ்வப்போது சேதம் ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு வனச்சரகம் பெரியூர், ஈச்சம்பள்ளம் மற்றும் அத்திமுட்லு, பென்னாகரம் வனச்சரகம் பூதிப்பட்டி மற்றும் சந்தப்பேட்டை மற்றும் ஒகேனக்கல் வனச்சரகம் கோடுப்பட்டி ஆகிய கிராமங்களில் மனித, விலங்குகள் மோதல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிராம மக்கள் மற்றும் வனத்துறை முன்களப் பணியாளர்கள் கொண்ட மனித-விலங்கு மோதல் தடுப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, வாட்ஸ்அப் செயலி மூலம், யானைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை குழுவினர் பரிமாறி கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், இரவு ரோந்து பணி மேற்கொள்ள தலா ₹2,500 மதிப்பிலான ₹3.75 லட்சம் மதிப்பிலான 150 டார்ச் லைட்டுக்ள விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் கடந்த ஜூலை மாதத்தில் 27 முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வன விலங்குகளின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வனப்பகுதிக்குள் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார்கள் கொண்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, வனக்குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது. மேலும், யானைகள் உணவு தேவைக்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வனப்பகுதியையொட்டிய கிராம எல்லைகளில் சூரிய தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து 24 மணிநேரமும் பொதுமக்கள் 1800 425 4586 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இந்த யானைகள் வனத்தை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்களில் புகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பணிக்கு செல்லும் விவசாயிகளை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்கவே, விவசாயிகளுக்கு அதிநவீன டார்ச் லைட், வனத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு, அடிக்கடி யானைகள் வரும் கிராமங்களை தேர்வு செய்து நவீன தொழில்நுட்ப ரக டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது. ஒரு டார்ச் லைட்டின் மதிப்பு ₹2500 ஆகும். இது 300 முதல் 400 மீட்டர் தூரத்திற்கு வெளிச்சம் தரக்கூடியதாகும். 6 கிராமங்களை சேர்ந்த 150 விவசாயிகளுக்கு முதல்கட்டமாக இந்த டார்ச்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதை முறையாக கையாண்டு மனித, விலங்குகள் மோதல் தடுக்கப்பட்டால், வனத்தை ஒட்டிய அனைத்து கிராமங்களுக்கும் டார்ச் லைட் வழங்கப்படும். மேலும் யானைகள் ஊருக்குள் வருவதை தெரிந்து கொள்ள குழுக்கள் உருவாக்கப்பட்டு, வாட்ஸ்அப் செயலி மூலம் யானைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை குழுவினர் பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்கள் மற்றும் வனத்துறை முன்களப் பணியாளர்கள் கொண்ட மனித-விலங்கு மோதல் தடுப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மனித, விலங்குகள் மோதலை தடுக்க தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,WhatsApp ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி