×

மயிலாடுதுறையில் திருவிக மார்க்கெட் கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

மயிலாடுதுறை, ஆக.17: மயிலாடுதுறை நகரில் காவிரி தென்கரையில் மகாதானத்தெரு தொடங்கும் பகுதியில் திருவிக மார்க்கெட் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் இந்த பகுதியில் மார்க்கெட் பகுதி என்றே அழைக்கப்பட்டு வருகிறது, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் கடந்த 1997ம் ஆண்டு நகராட்சி சார்பில் 66 கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுஏலம் விடப்பட்டு ஏலத்தொகையை செலுத்தி காய், கறி வியாபாரிகள் கடையை எடுத்து நடத்தி வருகின்றனர். திருவிக மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் நலனுக்காக கழிவறை, குளியல் அறைகளும் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கான்கிரீட் கட்டிடமாக கட்டிகொடுக்கப்பட்ட இந்த மார்க்கட்டில் உள்ள கடைகள் அனைத்தும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கான்கிரீட் சிமெண்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளது. மேலும், மழைகாலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் காய்கறிகடை நடத்துபவர்கள் ஒருசிலர் தங்கள் கடையின் மேற்கூரையை பழுதுநீக்கம் செய்து வைத்துள்ளனர். அதனை செய்தும் சிமெண்ட் காரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுகிறது. இதனால் பலர் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான கடையின் உள்பகுதியில் தற்காலிகமாக தரகஷெட் போட்டு வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒருசில கடைகளில் சிமெண்ட் காரைகள் அதிகமாக பெயர்ந்து விழுந்ததால் அங்கு வியாபாரம் செய்வதற்கு அஞ்சி கடையை அப்படியேபோட்டு விட்டு சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் வியாபாரத்திற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் நேற்று திருவிகமார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் அதிகளவில் பெயர்ந்து விழுந்துள்ளது. அதிஷ்டவசமாக அந்த கடையில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரிய அசம்பாவிதங்கள ஏற்படவில்லை. நேற்று அமாவாசை என்பதால் மார்கெட் அரைநாள் மட்டுமே இயங்கும் என்பதாலும். பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறையில் திருவிக மார்க்கெட் கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mayeladuthur ,Mayiladuthura ,Thiruvika Market ,Mahatanateru ,Kaviri ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு