×

கரூர் மாவட்டத்துக்கு மாநில அளவில் இரண்டு விருதுகள்: அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கரூர், ஆக. 17: வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை கண்டறிதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றுக்காக கரூர் மாவட்டத்துக்கு மாநில அளவில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்துக்கு இரண்டு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் விருது நல்லாளுமை விருது. நம் நாட்டிலேயே முதல் முறையாக வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்துவதை, முன்னோடி திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்.

இதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களையே இந்த பெருமை சாரும். இதைத் தவிர அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் அனைவரின் பங்கும் முக்கியமானது. இரண்டாவதாக, மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது. இரண்டு ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில், அரசு அலுவலர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த விருது கிடைப்பதற்கு முக்கிய காரணம், மாநிலத்திலேயே அதிக அளவில் வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாவட்டமாக கரூர் விளங்கி வருகிறது. அதற்கு வருவாய்த்துறையின் பங்கு முக்கியமானது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர், இரண்டு கோட்டாட்சியர்களுக்கு வாழ்த்துகள். அனைத்து தாசில்தார்களுக்கும் இந்த பெருமை சென்றடையும். கிட்டத்தட்ட 700 பட்டாக்கள் வழங்கியுள்ளோம். இது மாநிலத்திலேயே அதிகமானது.

இது தவிர, ஊரக வளர்ச்சி துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ‘விடியல் வீடு’ என்ற திட்டம். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு வங்கி கடன் அதிக அளவில் கரூர் மாவட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்துள்ளோம். இந்த விருதுகள், கரூர் மாவட்டத்துக்கான அங்கீகாரம். வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கோரிக்கை மனுக்கள் வழங்க வரக்கூடிய மக்களுக்கும், பயனாளிகளுக்கும் உடனுக்குடன் உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடைய பயன்தான் இந்த விருதுக்கான அங்கீகாரம். இந்த விருது கிடைப்பதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்துக்கு மாநில அளவில் இரண்டு விருதுகள்: அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Karur District ,Karur ,Dinakaran ,
× RELATED தமிழ், ஆங்கிலத்தில் திறன் வேண்டும் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்